பதிவு செய்த நாள்
03
அக்
2011
03:10
மணிலாலுக்கு உடம்பு குணமாகிவிட்டது. ஆனால் கீர்காமில் குடியிருந்த வீடு, வசிப்பதற்கு ஏற்றது அல்ல என்பதைக் கண்டேன். அது ஈரம் படிந்த வீடு, நல்ல வெளிச்சமும் இல்லை. எனவே, ஸ்ரீ ரேவாசங்கர் ஜகஜ் நீவனுடன் கலந்து ஆலோசித்து, பம்பாய்க்குச் சுற்றுப்புறத்தில் காற்றோட்டமான ஒரு பங்களாவை வாடகைக்கு அமர்த்திக் கொள்ளவது என்று தீர்மானித்தேன். பாந்தராவிலும் சாந்தா கருஸிலும் தேடி அலைந்தேன். பாந்தராவில் மிருகங்களைச் கசாப்புக்கடைக்காகக் கொல்லுமிடம் இருந்ததால் அந்த இடம் வேண்டாம் என்று முடிவு செய்தோம். கட்கோபரும் அதை அடுத்த இடங்களும் கடலுக்கு வெகு தொலைவில் இருந்தன. கடைசியாகக் சாந்தா குருஸிலி ஓர் அழகான பங்களா கிடைத்தது. சுகாதாரத்தைப் பொறுத்த வரையில் அதுவே மிகச் சிறந்தது என்று அதை வாடகைக்கு அமர்த்தினோம்.
சாந்தா கருஸிலிருந்து சர்ச்சகேட்டுக்குப் போய் வர முதல் வகுப்பு ரெயில் ஸீஸன் டிக்கெட்டு வாங்கிக்கொண்டேன். என் வண்டியில் நான் ஒருவனே முதல் வகுப்புப் பிரயாணியாக இருப்பதைக் குறித்து நான் அடிக்கடி ஒருவகையான பெருமை கொண்டதாக எனக்கு ஞாபகம் இருக்கிறது. அடிக்கடி பாந்தராவுக்குப் போகும் வேகமான ரெயிலில் செல்வதற்காகவே நான் அங்கே போய்விடுவேன். வக்கீல் தொழிலில் நான் எதிர்பார்த்ததைவிட அதிகமாகவே எனக்கு வருமானம் கிடைத்து வந்தது. எனது தென்னாப்பிக்கக் கட்சிக்காரர்கள், அவ்வப்போது எனக்கு ஏதாவது வேலை கொடுத்துக் கொண்டிருந்தார்கள். கிடைத்த வருமானம், என் வாழ்க்கையை நடத்திக் கொண்டு போவதற்குப் போதுமானதாக இருந்தது.
ஹைகோர்ட்டு வழக்கு எதுவும் எனக்கு இன்னும் கிடைத்தபாடில்லை. அக்காலத்தில் பயிற்சிக்காக நடந்துவந்த சட்ட விவாதக் கூட்டங்களில் பங்கெடுத்துக்கொள்ள நான் என்றுமே துணிந்ததில்லையெனினும் அக் கூட்டங்களுக்குப் போய் கொண்டிருந்தேன். அவைகளில் ஜமியத்ராம் நானா பாய் முக்கியமாகப் பங்கெடுத்துக் கொண்டது எனக்கு நினைவிருக்கிறது. மற்றப் புதுப் பாரிஸ்டர்களைப் போலவே நானும், ஹைக்கோர்ட்டில் நடக்கும் விசாரணைகளைக் கவனிக்கப்போவதை வழக்கமாக்கிக் கொண்டேன். அப்படி அங்கே போய்கொண்டிருந்ததன் நோக்கம், என் அறிவை வளர்த்துக் கொள்ளுவதைவிடக் கடலிலிருந்து நேராக அங்கே அடித்துக் கொண்டிருக்கும் நித்திரையை அளிக்கும் இன்பக் காற்றை வாங்குவதற்குத்தான். இந்தச் சுகத்தை அனுபவித்து வந்தவன் நான் ஒருவன் மாத்திரம் அல்ல என்பதையும் கவனித்தேன். அது ஒரு நாகரிகச் செயலாகவே ஆகிவிட்டதால் அதைக் குறித்து வெட்கப்படவேண்டியது எதுவும் இல்லை.
என்றாலும் ஹைக்கோர்ட்டுப் புத்தகசாலையைப் பயன்படுத்திக் கொண்டேன். பலருடன் புதிதாகப் பழக்கமும் ஏற்பட்டது. சீக்கிரத்திலேயே எனக்கு ஹைக்கோர்ட்டிலும் வேலை இருக்கும் என்று தோன்றிற்று. இவ்வாறு ஒரு புறத்தில் என் தொழில் சம்பந்தமான கவலையே நீங்கிவிட்டதாகக் கருதலானேன். மற்றொரு புறத்திலோ, என் மீது சதா கண் வைத்திருந்தவரான கோகலே, எனக்காகத் தமது சொந்தத் திட்டங்களைப் போடுவதில் சுறுசுறுப்பாக இருந்து வந்தார். ஒவ்வொரு வாரமும் இரண்டு மூன்று தடவைகள் என் அலுவலகத்திற்கு வருவார். நான் அறிந்திருக்க வேண்டும் என்று அவர் கருதும் நண்பர்களுடனேயே அவர் எப்பொழுதும் வருவார். தாம் செய்துவரும் வேலையின் தன்மையைக் குறித்து அவ்வப்போது எனக்குச் சொல்லி வருவார். என் சொந்தத் திட்டங்கள் எவையும் நிலைத்திருக்கக் கடவுள் என்றுமே அனுமதித்ததில்லை என்றே சொல்ல வேண்டும். என் திட்டங்களை அவர் வழியில் அவர் பைசல் செய்து கொண்டிருந்தார்.
நான் எண்ணிவாறு நான் பம்பாயில் நிலைத்து விட்டதாகத் தோன்றிய சமயத்தில் எதிர்பாராத விதமாகத் தென் ஆப்பரிக்காவிலிருந்து எனக்கு ஒரு தந்தி வந்தது. சேம்பர்லேன் இங்கே எதிர்பார்க்கப்படுகிறார். தயவு செய்து உடனே திரும்பி வாருங்கள் என்பதே அந்தத் தந்தி. நான் வாக்களித்திருந்தது நினைவுக்கு வந்தது. பிரயாணத்திற்கு எனக்குப் பணம் அனுப்பியதுமே நான் புறப்படத் தயாராக இருப்பதாகப் பதில் தந்தி கொடுத்தேன். அவர்களும் உடனே பணம் அனுப்பி விட்டார்கள். என் அலுவலகத்தைக் கைவிட்டுவிட்டுத் தென்னாப்பிரிக்காவுக்குப் புறப்பட்டேன். அங்கிருந்த வேலை முடிய ஓர் ஆண்டாவது ஆகும் என்று எண்ணினேன். எனவே, பம்பாயில் பங்களாவை அப்படியே வைத்துக் கொண்டு என் மனைவியையும் குழந்தைகளையும் அங்கேயே விட்டுச் சென்றேன்.
நாட்டில் ஒரு வேலையும் அகப்படாமல் கஷ்டப்படும் ஊக்கமுள்ள இளைஞர்கள் மற்ற நாடுகளில் குடியேறிவிட வேண்டும் என்று அப்பொழுது நம்பினேன். ஆகையால், அப்படிப்பட்ட இளைஞர்கள் நான்கு, ஐந்து பேரை என்னுடன் அழைத்துச் சென்றேன். அதில் ஒருவர் மகன்லால் காந்தி. காந்தி குடும்பம் எப்பொழுதுமே பெரிய குடும்பம் பழைய சுவட்டிலேயே போய்க் கொண்டிருக்க விரும்பாதவர்களைக் கண்டு பிடித்து வெளிநாடுகளுக்குத் துணிந்து போகும்படி செய்ய விரும்பினேன். இவர்களில் அநேகரை என் தந்தையார் சமஸ்தான உத்தியோகங்களில் அமர்த்தி வந்தார். அத்தகைய உத்தியோக மோகத்திலிருந்து அவர்களை விடுவிக்க விரும்பினேன். அவர்களுக்கு வேறு வேலை தேடிக் கொடுக்கவும் என்னால் முடியாது. அவர்கள் சுயநம்பிக்கையில் வாழ்பவர்களாக இருக்க வேண்டும் என்று விரும்பினேன். ஆனால், என் லட்சியங்கள் உயர்வானவை ஆக ஆக என் லட்சியங்களையே ஏற்றுக்கொள்ளும்படி அந்த இளைஞர்களைத் தூண்ட முயன்றேன். மகன்லால் காந்திக்கும் வழிகாட்டிய வகையில் என் முயற்சி மிகப் பெறும் வெற்றியை அடைந்தது. இதைப்பற்றிப் பிறகு கூறுகிறேன்.
மனைவி, குழந்தைகளை விட்டுப் பிரிவது, நிலையான குடித்தனத்தை நடுவில் குலைப்பது, நிச்சயமானதொரு நிலையிலிருந்து நிச்சயமற்ற நிலைக்குப் போவது ஆகிய இவையாவும் ஒரு கணம் எனக்கு வேதனை தருவனவாகவே இருந்தன. ஆனால் நிச்சயமற்றதான வாழ்வைக் கண்டு அஞ்சாத தன்மை எனக்கு இருந்தது. சத்தியமாக இருக்கும் கடவுளைத் தவிர மற்ற எல்லாமே நிச்சயமற்றதாயிருக்கும் இவ்வுலகத்தில் நிச்சயமான வாழ்வை எதிர்பார்ப்பது தவறு என்று எண்ணுகிறேன். நம்மைச் சுற்றிலும் தோன்றுபவை, நிகழ்பவை ஆகிய எல்லாமே நிச்சயமற்றவையும் அநித்தியமானவையுமே ஆகும். ஆனால் இவற்றிலெல்லாம் மறைந்திருக்கும் எல்லாவற்றிலும் மேலானதான பரம்பொருள் ஒன்றே நிச்சயமானது. அந்த நிச்சயமான பரம்பெருளை ஒரு கணமேனும் தரிசத்து, அதனுடன் தன்னை இணைத்துக் கொண்டு விடுபவனே பெரும் பாக்கியசாலி. அந்தச் சத்தியப் பொருளைத் தேடுவதே வாழ்வின் நித்தியானந்தமாகும். சரியான தருணத்தில் நான் டர்பன் போய் சேரந்தேன். அங்கே வேலை எனக்காகக் காத்துக் கொண்டிருந்தது. சேம்பர் லேனிடம் தூது செல்வதற்குத் தேதியும் நிச்சயிக்கப்பட்டிருந்தது. அவரிடம் சமர்ப்பிப்பதற்கு மகஜரைத் தயாரிப்பதோடு நானும் தூது கோஷ்டியுனுடன் சென்று அவரைப் பார்க்கவேண்டும்.