திருச்செந்தூர் முருகன் கந்தசஷ்டி விழா யாகசாலை பூஜையுடன் துவங்கியது!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31அக் 2016 10:10
துாத்துக்குடி: திருச்செந்துார் முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா யாகசாலை பூஜையுடன் காலை துவங்கியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி, பச்சை ஆடை அணிந்து விரதம் துவக்கினர். நவ., 5 ம் தேதி சூரசம்ஹாரம் நடக்கிறது.
முருக பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடு திருச்செந்துார். இங்க சூரசம்ஹார விழா சிறப்பாக நடை பெறும். இதில் கலந்து கொள்ள தமிழகம், வெளி நாடுகளில் இருந்து பக்தர்கள் பங்கேற்பார்கள். சூரசம்ஹார விழாவில் ஆரம்ப நிகழச்சியான யாகசாலை பூஜை துவங்கியது. அதிகாலை ஒரு மணிக்கு நடைதிறக்கப்பட்டது. 1.30 க்கு விஸ்வரூபம்,2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிேஷகம், தீபாரதனை நடந்தது. காலை 7 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி, தெய்வாணையுடன் யாகசாலையில் எழுந்தருளினார். யாகசாலை பூஜை துவங்கியது. மூலவருக்கு காலை 9 மணிக்கு உச்சிகால அபிேஷகம் நடந்தது. யாகசாலையில் பூர்ணாகுதியுடன் மகா தீபாரதனை நடந்தது. ஜெயந்திநாதர் தங்க சப்பரத்தில் எழுந்தருளினார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கடலில் புனித நீராடி, நாழிக்கிணற்றில் நீராடி, பச்சை ஆடைஅணிந்து, கோயிலில் அங்கபிரதட்சனம் செய்து விரதம் துவக்கினர். நவ., 5ம் தேதி மாலை 4.30 மணிக்கு சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை இணை கமிஷனர் வரதராஜன், தக்கார் கோட்டை மணிகண்டன், கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.