பதிவு செய்த நாள்
31
அக்
2016
10:10
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி செம்பொற்சோதிநாதர் கோவில் பசுவிற்கு வளைகாப்பு விழா நடத்தப்பட்டது. கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலம் செம்பொற்சோதிநாதர் கோவிலில் உள்ள நந்தினி எனும் பசுவிற்கு நேற்று வளைகாப்பு விழா நடந்தது. அதனையொட்டி நேற்று அதிகாலை 4:00 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, 5:00 மணிக்கு நந்தினி பசுவிற்கு கோபூஜை, 5:30 மணிக்கு சிவதர்மக்கொடி உயர்த்தல், 6:00 மணிக்கு திருவிளக்கு, புனிதநீர், ஆணைந்து, மூத்தபிள்ளையார் வழிபாடுகள் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து வேள்வி பூஜைகள், திருமுறை விண்ணப்பம், பேரொளி வழிபாடுகளும், 8:45 மணிக்கு நந்தினி பசுவிற்கு காப்பு அணிவித்து சங்கு, கயிலை வாத்தியம், முழவு, கஞ்சிரா, பிரம்மதாளம் வாசித்து பூஜைகள் நடத்தப்பட்டது. மேலமங்கலம் குமாரசாமி தம்பிரான் சாமிகள் பக்தர்கள் அனைவருக்கும் ஆசி வழங்கினார். கோமாதா எங்கள் குலமாதா எனும் தலைப்பிலான விழா மலர் வெளியிட்டு, அனைவருக்கும் பிரசாதம் வழங்கினர். கள்ளக்குறிச்சி திருநாவுக்கரசர் திருமடம் நாச்சியப்பன் தலைமையிலான திருநாவக்கரசு நாயனார் உழவாரத்திருக்கூட்டத்தினர் வழிபாட்டினை செய்து வைத்தனர்.