மயிலாடுதுறை: மயிலாடுதுறை காவிரியில் நடந்த ஐப்பசி மாத அமாவாசை தீர்த்தவாரியில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர். மயிலாடுதுறை காவிரியில் ஐப்பசி மாதத்தில் புனித நீராடினால் பாவங்கள் நீங்கும் என்பது ஐதீகம். இங்கு ஐப்பசி மாதம் முழுவதும் கொண்டாடப்படும் துலா (ஐப்பசி) உற்சவத்தின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான, அமாவாசை தீர்த்தவாரி நேற்று நடைபெற்றது. அபயாம்பிகை சமேத மாயூரநாதர், ஞானாம்பிகை சமேத வதானேஸ்வரர், விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர், அறம் வளர்த்த நாயகி சமேத அய்யாறப்பர், பரிமளரங்கநாதர், ஆண்டுக்கு ஒரு முறை ஐப்பசி மாத அமாவாசையன்று மட்டுமே வெளிவரும் தட்சணாமூர்த்தி ஆகிய சுவாமிகள் காவிரிக் கரையில் எழுந்தருளினர். காவிரியில் அஸ்திர தேவருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை செய்து, சுவாமி தீர்த்தம் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தீர்த்தவாரியில் பங்கேற்ற பக்தர்கள், காவிரியில் போதிய தண்ணீரின்றி புனித நீராட முடியாமல் அவதிப் பட்டனர்.