பதிவு செய்த நாள்
08
நவ
2016
12:11
பொள்ளாச்சி: மழை வேண்டி, செட்டியக்காபாளையத்தில் அன்னதானம் வழங்கி, அரசமரத்துக்கும் - வேப்பமரத்துக்கும் திருக்கல்யாணம் நடந்தது. தென்மேற்கு பருவமழை பொய்த்து போனதால், வேதனையில் இருக்கும் விவசாயிகள், வடகிழக்கு பருவமழையாவது பெய்து நீர் நிலைகளை நிறைத்து, விவசாயத்தை வளமாக்கும் என எதிர்பார்த்திருந்தனர். ஆனால், வடகிழக்கு பருவமழையும் தற்போது திசை திரும்பியுள்ளதால், விவசாயிகள் மட்டுமன்றி குடிநீர் கிடைக்காமல் பொதுமக்களும் அதிருப்தி அடைந்துள்ளனர். இச்சூழலில், கிராமங்களில் பொதுமக்கள் மழை வேண்டி இயற்கையையும், இஷ்ட தெய்வங்களையும் வழிபட்டு வருகின்றனர். நெகமம் அருகே செட்டியக்கா பாளையம் கிராம மக்கள், மழை வேண்டி வித்தியாசமான வேண்டுதலை நிறைவேற்றினர். இப்படி செய்தால் மழை வரும் என்பது ஐதீகம். இதற்காக, செட்டியக்காபாளையம் ஊர்க்கிணறு, விநாயகர் கோவில் திடலில், அரசமரம் என்ற சிவனுக்கும், வேம்பு என்ற சக்திக்கும் திருக்கல்யாணம் திருவிழா ஊர்மக்களால் நடத்தப்பட்டது. காலை, 9.00 - 10.00 மணிக்குள் நடந்த திருமண விழாவில், ஊர்பொதுமக்கள் அனைவரும் பங்கேற்று மழை வேண்டி, பிரார்த்தனை செய்தனர். திருமணத்தை தொடர்ந்து, ஊர்மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.