பதிவு செய்த நாள்
08
நவ
2016
12:11
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள 11ம் நுாற்றாண்டை சேர்ந்த எல்லைக்கல் கல்வெட்டில் ஏர்வாடி ஊரின் பெயர் யேறுபடி என உள்ளதாக, தொல்லியல் ஆய்வாளர் விஜயராமு தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது: ராமநாதபுரம் அருகே ஏர்வாடியில் கண்டுபிடிக்கப்பட்டுள் 1000 ஆண்டுகள் பழமையான எல்லைக்கல் கல்வெட்டில், ஏர்வாடியின் அன்றைய பெயர் யேறுபடி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கல்லானது ஏர்வாடியில் இருந்து 3 கி.மீ., தொலைவில் கன்னியாகுமரி செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ளது. வறண்ட ராமநாதபுரம் மண்ணில் பாண்டிய மன்னர்கள் ஏராளமான ஏரிகளை அமைத்துள்ளனர். வைகை, குண்டாறு, கிருதுமால் நதி, தேனாறு போன்ற நதிகளில் தடுப்பணைகள் கட்டி, கால்வாய் வெட்டி ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டு சென்றனர். பாண்டியர்களுக்கு பிறகு சேதுபதிகள் இப்பணியை செய்தனர்.கமுதக்குடி அருகே கூத்தன் கால்வாயானது கூத்தன் சேதுபதியால் (1623--1635) அமைக்கப்பட்டது.
இதே போல் ரெகுநாத காவேரி, ராமநாதமடை, ரெகுநாதமடை, ராஜசூரிய மடை போன்ற ஏராளமானவற்றை கூறலாம். இதுபோல் விவசாயம் சார்ந்து அமைக்கப்பட்ட கண்மாய்களில் ஏர்வாடி கண்மாய் ஒன்று. இதன் மேற்கு கடைகோடியில் புதுக்கரைக்கு எல்லையாக கல் ஒன்று நடப்பட்டுள்ளது. நிலங்கள், கண்மாய்கள் பெயரில் கிராமங்களுக்குள் எல்லை பிரச்னை வரக்கூடாது என்பதற்காக மன்னர்கள் தொலை நோக்கோடு எல்லைக்கல் நட்டு வைத்துள்ளனர். அவ்வாறு இங்கு நடப்பட்ட எல்லைக்கல்லானது மண்ணிற்கு மேல் மூன்றேகால் அடி உயரத்தில் வெளியில் தெரிகிறது. இக்கல்வெட்டில், “யேறுபடி கிராம கண்மாய் மேல கடகோடி புதுகரை யெல்கைக்கல்” என்ற வாசகம் உள்ளது. இக்கல்வெட்டால் இரண்டு தொன்மையான விஷயங்களை அறியலாம். அதன்படி, கண்மாய் கரைக்கு எல்லைக்கல் நடும் முன்பே ஒரு கரை இருந்துள்ளது. எனவேதான், மேலக்கடகோடி புதுகரைக்கு என்ற வாசகம் உள்ளது. தற்போதைய கரையும் இக்கல்லில் இருந்து 500 மீ., தொலைவில் உள்ளது. எனவே, தற்போதைய கண்மாய் கரை குறைந்த பட்சம் மூன்றாவதாக அமைந்திருக்கலாம்.இரண்டாவதாக, ஏர்வாடிக்கு அப்போது ஏறுபடி என்ற பெயர் இருந்துள்ளது. அதனால்தான் யேறுபடி என கல்வெட்டில் உள்ளது. இதுவே காலப்போக்கில் ஏர்வாடி என மறுவி வந்துள்ளது.மேலும் இப்பகுதி மக்கள் கூற்றுப்படி, மீனவர் வலையில் சிக்கிய முருகன் கரையேறிய இடம் யேறுபடி என்றழைக்கப்பட்டதாகவும், பின் ஏர்வாடி என மாறியதாகவும் கூறப்படுகிறது.இதனால்தான் இங்குள்ள மீனவர்கள் வலையை இழுக்கும் போது, ஓ வேலா, கா வேலா என்று வேலன் பெயரை சொல்லியே இழுக்கின்றனர். இந்த எல்லைக்கல் மிகவும் தொன்மையானது. ஏர்வாடி தர்காவிற்கு சிவக்குமார முத்து விஜயரகுநாத சேதுபதியால் 1744ல் நிலம் நன்கொடை அளிக்கப்பட்டுள்ளது. அப்போது ஏர்வாடி என்றே உள்ளது. விக்கிரம பாண்டியனுக்கும் சுல்தான் சையத் இப்ராகிமிற்கும் கி.பி. 1207ல் ஏர்வாடியில் சண்டை நடந்துள்ளது. அப்போதும், “பாதுஷா நாயகம் ஏர்வாடி” என்றே உள்ளது. எனவே இக்கல் 1000 ஆண்டுகள் தொன்மையானது, எனலாம்.இவ்வாறு விஜயராமு தெரிவித்தார். தொடர்புக்கு 94864 17770.