பதிவு செய்த நாள்
09
நவ
2016
12:11
திருச்சி: திருச்சி, ஸ்ரீரங்கம் சிருங்கேரி மடம் சார்பில், தமிழகத்தில் நல்ல மழை பெய்ய வேண்டியும், தொடர்ந்து, காவிரியில் தண்ணீர் திறந்து, விவசாயம் செழிக்க வேண்டியும், காவிரி ஆற்றில் வருண ஜெபம் செய்யப்பட்டது. இது குறித்து, ஸ்ரீரங்கம் சிருங்கேரி மடத்தின் நிர்வாக அதிகாரி ரங்கராஜன் கூறியதாவது: கடந்த மாதம், 16ம் தேதி முதல், சிருங்கேரி மடம் சார்பில், ஈரோடு, பவானி, மோகனுார், மகாதானபுரம், பூம்புகார் உட்பட, 10க்கும் மேற்பட்ட இடங்களில் காவிரி ஆற்றில் அமர்ந்து வருண ஜெபம் செய்யப்பட்டது. நேற்று, வருண ஜெபத்தை நிறைவு செய்யும் வகையில், நடுக்காவிரியாக கருதப்படும் திருச்சி, ஸ்ரீரங்கம் காவிரி ஆற்றுப்பாலம் அருகே உள்ள கருட மண்டபம் படித்துறையில் வருண ஜெபம் நடத்தப்பட்டது. 10 பேர் காவிரி ஆற்று நீரில் அமர்ந்து, மழை பெய்ய வேண்டி யாகம் நடத்தினர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.