பதிவு செய்த நாள்
15
நவ
2016
02:11
திருத்தணி: கடந்த, 85 ஆண்டாக பஜனை குழுவினர், ஒவ்வொரு மாதமும் வரும், கிருத்திகை விழாவில், மலைக்கோவிலுக்கு நடந்து சென்று, மூலவரை தரிசித்து வருகின்றனர். திருத்தணி முருகன் கோவிலில், ஒவ்வொரு மாதமும், கிருத்திகை விழா வெகு விமர்சையாக நடந்து வருகிறது. இந்த கிருத்திகை விழாவில், திருத்தணி மற்றும் வளர்புரம் பகுதியைச் சேர்ந்த மலைதாசர் திருப்புகழ் திருச்சபை, வாரியார் திருப்புகழ் திருச்சபை மற்றும் கிருபானந்த திருப்புகழ் திருச்சபை போன்ற பஜனை குழுவினர், 20க்கும் மேற்பட்டோர், திருத்தணி அரசு மருத்துவமனை அருகில் உள்ள விநாயகர் கோவிலில் இருந்து, பஜனையை துவங்கி, மேட்டுத் தெரு, பழைய பஜார் தெரு, ஜோதிசாமி தெரு மற்றும் ம.பொ.சி.சாலை வழியாக, மலைப்படிகளில் வழியாக மலைக்கோவிலுக்கு சென்று மூலவரை வழிபடுவர். அதுவரை முருகன் பக்தி பாடல்கள் பாடியவாறு பஜனை குழுவினர் ஊர்வலமாக செல்கின்றனர். இதுகுறித்து, பஜனை குழுவினர் கூறுகையில், எங்களது தாத்தா காலத்தில் இருந்து, பஜனை செய்து வருகிறோம். தற்போது, 85 ஆண்டாக முருகன் மலைக்கோவிலுக்கு சென்று வருகிறோம் என்றார்.