பதிவு செய்த நாள்
21
நவ
2016
10:11
சபரிமலை: மாளிகைப்புறத்தம்மன் எழுந்தருளலுக்காக, புதிய வாகனம் தயார் செய்யப்பட்டு, கோவிலில் சமர்ப்பணம் செய்யப்பட்டது.மகரவிளக்கு முடிந்தது முதல், தொடர்ச்சியாக, ஐந்து நாட்கள், மாளிகைப்புறத்தம்மன் யானை மீது எழுந்தருளுவார். அய்யப்பனை மணம் முடிக்க வேண்டும் என்ற வேண்டுதலுடன், நான்கு நாட்கள் சன்னிதானம் செல்லும் போது தன்னை காண, கன்னி அய்யப்பன் வராத ஆண்டு திருமணம் செய்வதாக, அய்யப்பன் கூறியதாக இதன் ஐதீகம் கூறுகிறது.ஐந்தாவது நாள், சரங்குத்திக்கு செல்லும் போது அங்கு கன்னி அய்யப்ப பக்தர்கள், தாங்கள் வந்ததன் அடையாளமாக ஊன்றியுள்ள சரக்கோலை கண்டு, மனம் வருந்தி, மாளிகைப்புறத்தம்மன் கோவிலுக்கு எழுந்தருளுவார். இதற்காக ஒரு யானை, சன்னிதானம் கொண்டு வரப்படும். கடந்த ஆண்டு, டிராக்டர் சத்தத்தில் மிரண்ட யானை மிதித்தில், ஒரு மூதாட்டி இறந்தார். இதனால், தேவசம்போர்டு, மகரவிளக்கு சீசனில் யானை மீது எழுந்தருளலை ரத்து செய்தது. இதற்கு பதிலாக வாகனம் ஒன்றை உருவாக்கினர். இதில், மரத்தில் பித்தளை தகட்டை பொருத்தி, தங்கமுலாம் பூசப்பட்டுள்ளது. நாகர், துவாரபாலகர், சந்திரகலா போன்றவை இதில் இடம் பெற்றுள்ளன. நேற்று இந்த வாகனம் சபரிமலை கொண்டு வரப்பட்டது.மாளிகைப்புறத்தம்மன் கோவில் முன்புறம் நடந்த நிகழ்ச்சியில், தந்திரி கண்டரரு ராஜீவரரு, மாளிகைப்புறம் மேல்சாந்தி மனுநம்பூதிரி ஆகியோர் பூஜைகள் நடத்தி, கோவிலுக்கு சமர்ப்பணம் செய்தனர்.
கொச்சியில் உதவி மையம்: வெளி மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் வரும் அய்யப்ப பக்தர்கள், கொச்சி விமான நிலையம் வந்து, அங்கிருந்து காரில் சபரிமலை வருகின்றனர்.இவர்களுக்கு உதவும் வகையில், விமான நிலையத்தில் உதவி மையம் துவங்கப்பட்டுள்ளது. சபரிமலையில் முக்கிய வழிபாடுகள் மற்றும் அப்பம், அரவணை பிரசாத கூப்பனும் இங்கு கிடைக்கும். காலை, 9:00 முதல் நள்ளிரவு, 12:00 மணி வரை இந்த மையம் செயல்படும். திருவிதாங்கூர் தேவசம்போர்டு உறுப்பினர் அஜய்தரயில் குத்து விளக்கேற்றி, மையத்தை துவங்கி வைத்தார்.விமானம் மூலம் சபரிமலை வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதை அடுத்து, ஜன., 19 வரை, ட்ரூஜெட் ஏர்லைன்ஸ் ஐதராபாத்தில் இருந்து கொச்சிக்கு தினமும் சிறப்பு விமானத்தை இயக்குகிறது.