பதிவு செய்த நாள்
22
நவ
2016
02:11
பழநி: வங்கிகளின் தேவைக்காக தமிழகத்தில் உள்ள பழநி போன்ற முதுநிலை கோயில்களில் வாரம் 2 நாட்கள் உண்டியலை திறந்து எண்ண வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்த பின், 2000ம் ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளன. இதனால் சில்லரை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் சிலமாதங்களுக்கு ஒருமுறை அல்லது ஆண்டுக்கு ஒருமுறையே உண்டியல்கள் திறந்து எண்ணப்படுகின்றன. அந்த பணம் வங்கிகளில் டிபாசிட் செய்யப்படுகிறது.வங்கிகளில் ஏற்பட்டுள்ள சில்லரை தட்டுப்பாட்டை போக்க மதுரை மீனாட்சி அம்மன், பழநி, சமயபுரம், திருச்செந்துார், ராமேஸ்வரம் கோயில்கள் போல வருமானம் உள்ள அனைத்து முதுநிலை கோயில்களிலும் இனி மூன்று நாட்களுக்கு ஒருமுறை (வாரம் 2 முறை) உண்டியலை திறந்து எண்ணி, அப்பணத்தை வங்கிகளில் டிபாசிட் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது.கோயில் அதிகாரி ஒருவர் கூறுகையில், “பழநி கோயில் உண்டியல்கள் 20 நாட்களுக்கு ஒருமுறை திறந்து எண்ணப்படும். இதில் கிடைக்கும் ரூ. ஒருகோடிக்கு மேலான பணத்தை வங்கியில் டிபாசிட் செய்கிறோம். தற்போது வங்கிகளின் தேவைக்காக இனி 3 நாட்களுக்கு ஒருமுறை உண்டியல்களை திறந்து எண்ண உத்தரவு வந்துள்ளது. அதன்படி 2 நாட்களுக்கு முன் (நவ.,20) நடந்த உண்டியல் எண்ணிக்கையை தொடர்ந்து, அடுத்ததாக மீண்டும் நவ.,24 அல்லது 25ல் உண்டியல் திறக்கப்படும். பக்தர்கள் பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை உண்டியலில் செலுத்தவேண்டாம் என, அறிவிப்பு செய்துள்ளோம்,” என்றார்.