பதிவு செய்த நாள்
23
நவ
2016
01:11
பெரியகுளம்: “மனிதனுக்கு முக்தி கிடைக்க இறைவனையும், குருவையும் நாடுவதே சிறந்த பக்திக்கு வழி,” என, ஆன்மிக சொற்பொழிவில் குருமூர்த்தி வெங்கடேஷன் பேசினார். பெரியகுளம் அருகே லட்சுமிபுரத்தில் குளோபல் ஆர்கனைசேஷன் பார் டிவைனிடி இந்தியா டிரஸ்ட் சார்பில், மகாமந்திர கூட்டு பிரார்த்தனை நடந்தது. நாமத்வார் பொறுப்பாளர் கிருஷ்ணசைதன்யதாஸ், காசியம்மாள் மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர். முரளீதர சுவாமி சீடர், குருமூர்த்தி வெங்கடேசன் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்த்தினார். அவர் பேசுகையில், “நாம் அனைவரும் மனிதபிறவி கிடைத்துள்ளதற்கு மிகவும் புண்ணியம் செய்துள்ளோம். ஐந்து அறிவு படைத்த யானை, மான், மீன், வண்டு, விட்டில்பூச்சி ஆகிய ஒவ்வொன்றும், ஒன்றின் மீது ஆசையின் காரணமாக தன் உயிரை போக்கிக்கொள்ள வேண்டியுள்ளது. ஆதிசங்கர பகவத்பாதாள் கூறுகையில், மனிதனாக இருக்க கூடிய நாம் எல்லாவற்றின் மீது ஆசை வைத்திருக்கின்றோம். நம்ம கதி என்ன? என்று கேட்கிறார். ஆசையை மாற்றிக்கொள்ள வேறு என்ன? இறைவனை சரணாகதி அடைவதை தவிர வேறு வழியில்லை. அவன் நாமத்தை பாட வேண்டும் என்கிறார். தன்னுடைய கீர்த்தனத்தில் பஜகோவிந்தம், பஜகோவிந்தம் என பாடி இறைவனின் அருள் பெற சுலபமான வழி நாமசங்கீர்த்தனம் என்றார். அது போல், மனிதனுக்கு முக்தி கிடைக்க இறைவனையும், குருவையும் நாடுவதே சிறந்த பக்திக்கு வழி,”என்றார். பக்தர்களுக்கு குங்குமம் பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை பெரியகுளம் மற்றும் லட்சுமிபுரம் காட் சத்சங்கத்தினர் செய்திருந்தனர்.