டிச.6ல் பழநி கார்த்திகை திருவிழா துவக்கம் தங்கரத புறப்பாடு ரத்து
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28நவ 2016 12:11
பழநி: பழநிகோயிலில் டிச., 6ல் கார்த்திகை தீபத்திருவிழா துவங்குகிறது. கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு டிச.,6ல் பழநி மலைக்கோயிலில் மாலை 5:30 மணிக்கு சாயரட்சை பூஜையைத் தொடர்ந்து மூலவர் ஞானதண்டாயுதசுவாமி, சின்னக்குமாரசுவாமி, சண்முகர், வள்ளி, தெய்வானை, துவாரபாலகர்கள், விநாயகர், மயிலுக்கு காப்புக்கட்டும் நிகழ்ச்சி நடக்கிறது. விழாநாட்களில் உட்பிரகாரத்தில் யாகசாலை பூஜை, சண்முகார்ச்சனை, மகா தீபாராதனை நடக்கிறது. சின்னக் குமாரசுவாமி தங்கசப்பரத்தில் உலா வருதல் நடக்கிறது.
தங்கரதம் ரத்து: டிச.,12ல் பெரிய கார்த்திகையை முன்னிட்டு மலைக்கோயில் அதிகாலை 4:00 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. பகல் 2:00 மணிக்கு மேல் சண்முகார்ச்சனை, மகாதீபாராதனை நடக்கிறது. வழக்கமாக மாலை 5:30 மணிக்கு நடக்கும் சாயரட்சை பூஜை முன்னதாக மாலை 4:00 மணிக்கு நடத்தப்பட்டு, சின்னக்குமாரசுவாமி தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளுகிறார்.அதன்பின் மலைக்கோயில் நான்குபக்கத்திலும் தீபங்கள் ஏற்றப்படும். மாலை 6:00 மணிக்குமேல் திருக்கார்த்திகை தீபம் மற்றும் சொக்கப்பனை ஏற்றப்படுகிறது. இதனால் அன்று இரவு 7:00 மணி தங்கரத புறப்பாடு ரத்து செய்யப்பட்டுள்ளது.