திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் உள்ள காடு அனுமந்தராயர் கோயில் மிகவும் பிரசித்துப் பெற்றது. இந்தக் கோயிலில் அருளும் அனுமனின் கருவறையில் மேல் விதானம் கிடையாது. வெயில், மழை எல்லாம் இவர் மேல்தான் விழும். இவருக்கு வடைமாலை சாற்றும் பழக்கம் இல்லை. வருடம்தோறும், சித்திரை மாதம் பத்து நாட்கள் நடைபெறும் உற்ஸவத்தில், விசேஷ பிரார்த்தனை ஒன்று நடைபெறுகிறது. அதாவது, உற்ஸவத்தையொட்டி முக்கிய பிரமுகர்கள் ஒரு நாள் கட்டளையை ஏற்று, சாப்பாடும் போடுவார்கள். ஸ்வாமியிடம் பிரார்த்தனை செய்பவர்கள், ஏகாதசி தினத்தில் விரதம் கடைப்பிடித்து, மறுநாள் துவாதசியன்று - முதல் பந்தியில் சாப்பிட்டவர்களின் இலைகளில் படுத்து புரண்டபடி, கோயில் பிராகாரத்தை வலம் வந்தால், வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. பத்தாவது நாள் தேரோட்டம், அடுத்த நாள் ஆஞ்சநேயர் உற்ஸவத்துடன் நிறைவு பெறும்.