மங்களம் என்னும் சொல்லுக்கு அடையாளமாகத் திகழ்வது மஞ்சள் நிறம். மஞ்சளில் பிள்ளையார் பிடித்துவைத்து பூஜையைத் தொடங்குவது நமது வழக்கம். நமது குலதெய்வக் கோவிலுக்கோ இஷ்ட தெய்வக் கோவிலுக்கு வருவதாக நேர்ந்துகொள்ளும் போது மஞ்சள் துணியில் நாணயத்தை முடிந்துவைக்கிறோம். மலைக்கோயில்களுக்குச் செல்லும் பக்தர்கள் பெரும்பாலும் மஞ்சள் ஆடை அணிவதே வழக்கம். இறைவனுக்கு அபிஷேகம் செய்யும் நீரில் மஞ்சள் கரைப்பது மரபு. இப்படி மஞ்சளின் பெருமைகள் பல. தூய மஞ்சளிலிருந்து தயாரிக்கப்பட்ட குங்குமத்தை ஒரு தாளில் மடித்துவைத்திருந்து, மறுநாள் அதைப் பிரித்துப்பார்த்தால் தாளில் மஞ்சள் நிறம் ஏறியிருக்கும். அதுவே நல்ல குங்குமத்துக்கு அறிகுறி. நவகிரகங்களில் முழு சுபகிரகமான குருபகவான் மஞ்சள் நிறத்தினரே. பொன்னவன் என்று அழைக்கப்படும் குரு பகவானின் பலத்தைக்கொண்டே திருமணத்தை நிச்சயிக்கிறார்கள்.
பெண்களுக்கு மஞ்சளும் குங்குமமும் முக்கியமானவை. குண்டு மஞ்சள் வாங்கி, குளிக்கும்போது அதை கல்லில் உறைத்துப் பூசிக்கொள்வார்கள். அப்பொழுது கையில் கொஞ்சம்தான் வரும் கல்லில் அப்படியே இருக்கும். எனவே மஞ்சளை சிறுதுண்டுகளாக உடைத்து வெயிலில் காயவைத்து, பிறகு அதை இடித்துத் தூளாக்கி பத்திரப்படுத்திக்கொண்டால், தேவைப்படும்போது கிண்ணத்தில் எடுத்துப் பயன்படுத்தலாம்; முழுப்பயனையும் அடையலாம். மஞ்சளானது நோய் தீர்க்கும் அருமருந்து, பாலில் மஞ்சள்தூள் கலந்து அருந்தினால் இருமல் குணமாகும். மஞ்சள் பூசிவந்தால் கட்டிகள் உடையும். தொற்றுநோய் வராமல் தடுக்கும் சக்தி மஞ்சளுக்கு உண்டு. எனவேதான் சமையலில் சிறிதளவு மஞ்சள் சேர்க்கிறோம்.
திருமணப் பத்திரிகைகள் ஒருபுறம் சிவப்பு நிறம், இன்னொருபுறம் மஞ்சள் நிறம் கொண்டதாக இருக்கும். இது மஞ்சள், குங்குமத்தைக் குறிப்பதே. சுப காரியங்களுக்கு மளிகைப் பொருட்கள் எழுதிக்கொடுக்கும்போது, முதலில் மஞ்சள், குங்குமம் என்று ஆரம்பிப்பது வழக்கம். மணமக்களை ஆசீர்வதிக்க மஞ்சள் கலந்த அரிசியையே பயன்படுத்துகிறோம். படைக்கும் கடவுளான பிரம்மா மஞ்சள் நிறத்தவரே. செல்வங்களை வாரி வழங்கும் மகாலட்சுமியும் அதே நிறம்தான். மலர்களில் பல மஞ்சள்நிறம் கொண்டவை. தங்க அரளி என்றே ஒரு மலருக்குப் பெயருண்டு. பொன்னை வைக்கும் இடத்தில் பூ வைத்தல் என்ற பழமொழியும் மஞ்சளின் சிறப்பை உணர்த்துகிறது. மங்களம் என்பதே மஞ்சள்தான்!