பதிவு செய்த நாள்
30
நவ
2016
11:11
திருக்கனுார்: வழுதாவூர் அருகே, விவசாய நிலத்தில் ஸ்ரீதேவி, ஆண்டாள் ஆகிய பழங்கால கற்சிலைகள் கண்டெடுக்கப் பட்டுள்ளன. புதுச்சேரி மாநிலம் திருக்கனுார் அருகே, தமிழகப் பகுதியான வழுதாவூர் காலனியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன், 61; விவசாயி. இவர் கோட்டைமேடு பகுதியில் உள்ள தனது விவசாய நிலத்தை, கடந்த 26ம் தேதி பொக்லைன் இயந்திரம் மூலம் சமன் செய்த போது, மூன்று அடி ஆழத்தில் பெரிய கல் ஒன்று தென்பட்டது. கல்லை அகற்றிவிட்டு தோண்டியபோது, மூன்றரை அடி உயரமுள்ள ஆண்டாள் கற்சிலை, 5 அடி உயரத்தில் ஸ்ரீதேவி கற்சிலையும் கிடைத்தன.இதனையடுத்து, அப்பகுதி மக்கள் திரண்டு, விவசாய நிலத்தில் கண்டெடுக்கப்பட்ட கற்சிலைகளை, புதிதாக கட்டப்பட்டு வரும் பெருமாள் கோவிலில் வைத்து, வழிபாடு நடத்தினர். இதுகுறித்து தகவலறிந்த வருவாய் கிராம நிர்வாக அதிகாரி மணிகண்டன், கண்டமங்கலம் எஸ்.ஐ., ரவிசந்திரன் ஆகியோர், சம்பவ இடத்திற்கு சென்று கற்சிலைகள் குறித்து விசாரணை நடத்தினர். வழுதாவூர் பகுதியில், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ராஜாதேசிங்கு மன்னர் வாழ்ந்ததாக கூறப்படுவதால், தற்போது அங்கு கண்டெடுக்கப்பட்டுள்ள கற்சிலைகள் ராஜாதேசிங்கு காலத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டதாக இருக்கலாம் என கருதப்படுகிறது.