பகவான் சாஸ்தா எடுத்த மானுட அவதாரத்தில், கழுத்தில் அழகான மணிகளுடனும், ஆபரணங்களுடனும் ஜனித்ததால் மணிகண்டன் என்ற திருப் பெயர் அவருக்கு உண்டு. ஆனால், ஐயப்பன் என்ற பெயர் வந்ததற்கு வேறு காரணங்கள் உண்டு. சாஸ்தாவுக்கு ஐயன் என்று பிரசித்திப் பெற்ற பெயர் உண்டு. திருமந்திரம் போன்ற பண்டைய நூல்களில் இதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. ஐயன் என்பதற்கு, மிக உயர்ந்தவர் என்று பொருள். இந்த ஐயன் வார்த்தைக்குப் பின்னால் ஆர் என்கிற பதத்தைச் சேர்த்து (ஐயன்+ஆர்) ஐயனார் என்று தமிழ்நாட்டிலும், அப்பன் என்ற பதத்தைச் சேர்த்து (ஐயன்+அப்பன்) ஐயப்பன் என்று கேரளத்திலும் அழைக்கப்பட்டார்.