பதிவு செய்த நாள்
01
டிச
2016
11:12
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருவனந்தபுரம், பத்மநாப சுவாமி கோவிலுக்குள், பெண்கள், சுடிதார் மற்றும் சல்வார் கமீஸ் அணிந்து வர, கோவில் நிர்வாகம் உத்தரவிட்டும், நேற்று, சுடிதார் அணிந்து வந்த பெண்களை, கோவிலுக்குள் அனுமதிக்கவில்லை; இதை கண்டித்து, பக்தர்கள் போராட்டம் நடத்தினர். கேரளாவில், மார்க்.கம்யூ., கட்சியைச் சேர்ந்த, பினராயி விஜயன் முதல்வராக உள்ளார். இங்குள்ள கோவில்களில் பெரும்பாலும், ஆண்கள், வேட்டியும், பெண்கள், சேலையும் மட்டுமே அணிந்து செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். மாநில தலைநகர், திருவனந்தபுரத்தில் பிரசித்தி பெற்ற, பத்மநாப சுவாமி கோவிலிலும், இதே நடைமுறை பின்பற்றப்பட்டு வந்தது. இந்த விதிமுறையை மாற்ற வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பான வழக்கை விசாரித்த கேரள ஐகோர்ட், 30 நாட்களுக்குள் முடிவெடுக்கும்படி, கோவில் நிர்வாக அதிகாரிக்கு உத்தரவிட்டது. இதையடுத்து, பத்மநாப சுவாமி கோவிலுக்குள், பெண்கள், பாரம்பரிய சுடிதார் மற்றும் சல்வார் கமீஸ் அணிந்து வரலாம் என, கோவில் நிர்வாகம், நேற்று முன்தினம் அறிவித்தது. ஆனால், கோவில் தலைமை தந்திரி பரமேஸ்வரனும், கோவில் நிர்வாக கமிட்டியைச் சேர்ந்த சிலரும், இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில், புதிய உத்தரவை அடுத்து, பத்மநாப சுவாமி கோவிலுக்கு, பெண்கள் நேற்று சுடிதார் அணிந்து வந்தனர். ஆனால், கோவில் ஊழியர்கள், அவர்களை உள்ளே விட மறுத்து விட்டனர். எங்களுக்கு அது போன்ற உத்தரவு எதுவும் வரவில்லை என்றனர்.இதனால், கோபமடைந்த பக்தர்கள், கோவில் முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்பின், சில பெண்கள், கோவிலின் மேற்கு பகுதி வாசல் வழியாக உள்ளே நுழைந்தனர்.இதுபற்றி கோவில் நிர்வாக கமிட்டி தரப்பில், கோவில் நிர்வாக கமிட்டியிடம் ஆலோசிக்காமல், இத்தகைய முடிவு எடுக்கப்பட்டு உள்ளது; எனவே, தற்போதைய நடைமுறையே தொடரும் என, கூறப்பட்டு உள்ளது. பத்மநாப சுவாமி கோவிலில், பெண்கள் சுடிதார் அணிந்து வர அனுமதி மறுக்கப்பட்டதால், போராட்டம் நடந்துள்ளது. இந்த விஷயத்தில் அனைத்து அம்சங்களையும் ஆய்வு செய்த பின், கேரள அரசு சரியான முடிவு எடுக்கும். கடகம்பள்ளி சுரேந்திரன், கேரள தேவசம் போர்டு அமைச்சர், மார்க்சிஸ்ட்.