பதிவு செய்த நாள்
01
டிச
2016
10:12
மதுரை, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சொந்தமான மாரியம்மன் தெப்பக்குளத்தில் நிரந்தரமாக தண்ணீர் தேக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனினும் தெளிந்த குட்டையில் சிலர் எருமை மாடுகளை வைத்து மாட்டுத் தொழுவமாக்கி பாழ்படுத்தி வருகின்றனர்.
போதாக்குறைக்கு குப்பையை கொட்டியும், சிறுநீர் கழித்தும் பாழ்படுத்தி வருகின்றனர்.மதுரை மார்க்சிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ.,வாக இருந்த நன்மாறன் முயற்சியால் மாரியம்மன் தெப்பக் குளத்தின் வெளிப்பகுதி சீரமைக்கப்பட்டது. தெப்பத்தை சுற்றிலும் காலை, மாலை வாக்கிங் செல்வோருக்காக ஏராளமான சூப் கடைகள், வெஜிடபிள் சாலட் கடைகள் தெப்பத்தை சுற்றிலும் ஆக்கிரமித்துள்ளன. இவர்கள் பயன்படுத்தும் பாலிதீன் பாக்கெட்கள், பிளாஸ்டிக் கப்புகள் உள்ளிட்டவை தெப்பத்தில் கொட்டி பாழ்படுத்துகின்றனர்.
போதாக்குறைக்கு அவ்வழியாக செல்வோர் தெப்பத்தின் படிக்கட்டுகளில் சிறுநீர் கழித்து வருவதால் துர்நாற்றம் கடுமையாக உள்ளது.மாட்டுத்தொழுவமான தெப்பம் தெப்பத்தில் நிரந்தரமாக தண்ணீர் நிரப்புவதற்காக வைகை ஆற்றில் மெகா கிணறு வெட்டப்பட்டுள்ளது. இதிலிருந்து நான்கு ராட்சத குழாய்கள் மூலம் தண்ணீர் உறிஞ்சப்பட்டு தெப்பத்திற்கு திருப்பி விடப்படுகிறது. வடகிழக்கு பருவமழை கை கொடுக்காததால் கிணற்றில் நீர் ஊற்றுகளில் சிறிய அளவில் மட்டுமே தண்ணீர் உள்ளது. எனினும் ஒரு ராட்சத குழாய் மூலம் தண்ணீர் உறிஞ்சப்பட்டு தெப்பத்திற்கு தண்ணீர் விடப்படுகிறது. தெளிந்த குட்டையாக தெப்பம் மாறி வருகிறது. இதை பயன்படுத்தும் கும்பல் எருமை மாடுகளை தெப்பத்திற்குள் இறக்கி மாட்டுத்தொழுவமாக்கி விட்டனர். தெப்பத்தின் மைய மண்டபம் ஆடுகள் மேய்ச்சல் நிலமாக மாற்றி உள்ளனர். பழுதான மோட்டார் காயில்களை தீயிட்டு எரித்து தெப்பத்தை மாசடைய செய்கின்றனர்.
கடைகளை அகற்ற நடவடிக்கை: மீனாட்சி அம்மன் கோயில் இணை கமிஷனர் நடராஜன் கூறியதாவது: தெப்பக்குளத்தை சுற்றிலும் இரும்பு வேலி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தெப்பத்தை சுற்றிலும் உள்ள தள்ளுவண்டி கடைக்காரர்கள் பயன்படுத்தும் குப்பை, பாலிதீன் கழிவுகளை தெப்பத்தில் கொட்டக்கூடாது. மீறுவோர் மீது அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்து விதிமீறல் இருந்தால் கடைகளை நிரந்தரமாக அப்புறப்படுத்த மாநகராட்சிக்கு பரிந்துரைக்கப்படும். தெப்பத்தை அசுத்தம் செய்வோர் கண்காணிக்கப்படுகின்றனர். அவர்கள் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
பிடிபடும் மாடுகள் விற்பனை: மாநகராட்சி சார்பில் சாலையில் திரியும் கால்நடைகளை பிடித்து தீவனம் அளித்து பராமரித்து வருவதால் உரிமையாளர்கள் கால்நடைகளை மீட்காமல் மெத்தனமாக உள்ளனர். எனவே பிடிபடும் மாடுகளை விற்பனை செய்து வருவாய் ஈட்ட மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன்படி தெப்பக்குளத்தில் புகுந்துள்ள மாடுகள், ஆடுகளை பிடிக்க சிறப்பு குழுவை மாநகராட்சி அமைத்துள்ளது. எனவே கால்நடைகளை வளர்ப்போர் தங்களின் சொந்த இடத்தில் வைத்து பராமரித்தால் இழப்பீட்டில் இருந்து தப்பலாம் என மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.