பதிவு செய்த நாள்
01
டிச
2016
12:12
அன்னுார் : அன்னுார் வட்டாரத்தில், இந்த ஆண்டு மழை, 73 சதவீதம் பற்றாக்குறையாக பெய்துள்ளது. குளம், குட்டைகள் வறண்டு போய் விட்டன. நிலத்தடி நீர் மட்டம், 1,500 அடிக்கு கீழ் சென்று விட்டது. சோளம், கரும்பு உள்ளிட்ட பயிர்கள் கருகி வருகின்றன. கடும் வறட்சி நிலவுகிறது. எனவே மழை வேண்டி, காரேகவுண்டன் பாளையம் ஊராட்சி, அச்சம்பாளையம் மக்கள் நேற்று முன் தினம் திருவிளக்கு வழிபாடு நடத்தினர். செல்வ விநாயகர் கோவிலில், 108 திருவிளக்குகள் ஏற்றி வழிபாடு செய்தனர். வருண பகவானை வேண்டி சுலோகங்கள் வாசிக்கப்பட்டன. உடுமலை பரஞ்சோதி ஆசிரமத்தை சேர்ந்த மணிமேகலை பேசுகையில், “பிறரிடத்திலுள்ள குறைகளை காணாமல், நிறைகளை பார்க்க வேண்டும். யாரையும் வெறுக்கக் கூடாது. அன்பு காட்ட வேண்டும். குடும்பத்தில் அமைதி ஏற்பட்டால்தால் சமுதாயத்தில் அமைதி ஏற்படும்,” என்றார். விழாவில், சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பெண்கள் பங்கேற்றனர். செல்வ விநாயகருக்கு சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது.