நடுவீரப்பட்டு: சி.என்.பாளையம் மலையாண்டவர் கோவில் கும்பாபிஷேகப் பணிகளை கேரளா மாநிலம், பாலக்காடு நம்பூதிரிகள் பார்வையிட்டார். கடலுார் அடுத்த சி.என்.பாளையம் மலையில் புஷ்பகிரீஸ்வரர் கோவில் உள்ளது. ஆனால் இந்த கோவிலில் ஈஸ்வரன் சிலை இல்லாததால் கடந்த பல ஆண்டுகளாக பிள்ளையார் சுவாமியை முன்னிலைப்படுத்தி விழாக்கள் நடத்தப்படுவதால் இந்த கோவில் மலைபிள்ளையார் கோவில் என அழைக்கப்பட்டு வருகிறது. ஆனால் கோவில் முழுமையாக ஈஸ்வரன் கோவிலுக்கான அமைப்புகள் உள்ளது. இந்த கோவில் பழைய புராண ஏடுகளில் ராஜராஜேஸ்வரி சமேத ராஜராஜேஸ்வரர் கோவில் என இருப்பதாக அறிந்து தற்போது இக்கோவில் ராஜராஜேஸ்வரி சமேத ராஜராஜேஸ்வரர் கோவில் என மாற்றப்பட்டு திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. மகா கும்பாபிஷேகம் வரும் 4 ம் தேதி நடக்கிறது.
விழாவை முன்னிட்டு இன்று (1ம் தேதி) காலை 8:30 மணிக்கு விக்னேஸ்வரர், கணபதி பூஜையுடன் துவங்குகிறது. நாளை (2ம் தேதி) மாலை 6:00 மணிக்கு யாகசாலை பிரவேசம், முதல்கால யாகசாலை பூஜை நடக்கிறது. 3ம் தேதி காலை 8:30 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜையும், பகல் 12:00 மணிக்கு அஷ்டபந்தனம் சாத்துதலும், மாலை 6:00 மணிக்கு 3ம் கால யாகசாலை பூஜையும் நடக்கிறது. கும்பாபிஷேக தினமான 4ம் தேதி காலை 7:00 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜை நடந்து 9:35 மணிக்கு கடம் புறப்பாடாகி 9:45 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. இதனை முன்னிட்டு நேற்று கேரளா பாலக்காடு பீதாம்பர பணிக்கர், மணிகண்ட நம்பூதிரிகள் அடங்கிய குழுவினர் கோவிலை பார்வையிட்டு சோழி போட்டு கும்பாபிஷேக பணிகள் குறித்து ஆய்வு செய்தனர். இதில் இக்கோவிலில் உள்ள சிவன் விக்கிரகம் சுயம்பு வடிவிலானது எனவும், இக்கோவில் சித்தர்களால் கட்டப்பட்டிருக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர். இக்கோவில் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் போல கிரிவலம் செல்ல உகந்தது எனவும் தெரிவித்தனர்.