கடலாடி: பக்தியை மரங்கள், விலங்குகள் மூலமாக மெய்ப்பிக்கும் சடங்குகள் நடப்பது வழக்கம். அந்த வகையில் மழை, திருமணம், புத்திரபாக்கியும், தோஷ நிவர்த்தி வேண்டி கடலாடி ஊரணிக்கரை சித்தி விநாயகர் கோயிலில் ஒன்றோடொன்று பின்னி பிணைந்து வளர்ந்துள்ள அரசு-வேம்பு மரங்களுக்கு திருமணம் நடக்க உள்ளது. டிச.,4ல் நடக்க உள்ள இந்த தெய்வீக திருமண ஏற்பாடுகளை அப்பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் செய்துவருகின்றனர். அரச மரத்தை பரமேஸ்வரனாகவும், வேம்பு மரத்தை பார்வதியாகவும் பாவித்து திருமண நிகழ்ச்சி நடக்கிறது. இதற்காக திருமண பத்திரிகை அச்சடித்து அப்பகுதிகளில் வழங்கப்பட்டு வருகிறது. மணமக்கள் படங்களுடன் விளம்பர போர்டுகளும் வைக்கப்பட்டுள்ளது. திருமண விழா குறித்து அதன் ஒருங்கிணைப்பாளர் சோமநாதன் கூறுகையில், “மனிதன் இயற்கையோடு ஒன்றி வாழவேண்டும் என்பதை உணர்த்துவதற்காகவே இந்த திருமணம் நடத்தப்படுகிறது. பக்தியை மரங்கள் மூலம் உணர்த்தும் சம்பிரதாயம் இந்து மதத்தில் உள்ளது. அந்த வகையில் மழை பெய்து விவசாயம் செழிக்கவேண்டும், தோஷம் நீங்கி சுபகாரியங்கள் ஈடேறவேண்டும் என்பதற்காக அரசு-வேம்பு திருமணம் நடக்கிறது. இதற்காக 3 ஆயிரம் திருமண பத்திரிகை அச்சடித்து வழங்கப்பட்டுள்ளது. கடலாடி கிழக்கு பகுதி மணமகள் வீட்டாராகவும், மேற்குப்பகுதி மணமகன் வீட்டாரகவும், பாவித்து திருமணவிழா கோலகலமாக நடக்க உள்ளது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தி வணங்க உள்ளனர், என்றார்.