பதிவு செய்த நாள்
10
அக்
2011
01:10
விசாரணை ஆரம்பமாயிற்று. அரசாங்க வக்கீல், மாஜிஸ்டிரேட் முதலிய அதிகாரிகள் எல்லாம் திகைத்துக் கொண்டிருந்தார்கள். என்ன செய்வதென்பதே அவர்களுக்குப் புரியவில்லை. வழக்கை ஒத்தி வைத்து விடும்படி மாஜிஸ்டி ரேட்டை அரசாங்க வக்கீல் வற்புறுத்திக் கொண்டிருந்தார். ஆனால், நான் குறுக்கிட்டேன். சம்பாரணை விட்டுப் போய் விடவேண்டும் என்ற உத்தரவை மீறிய குற்றத்தை நான் செய்திருப்பதாக ஒப்புக்கொள்ள விரும்புகிறேன். ஆகையால், வழக்கை ஒத்தி வைக்கவேண்டாம் என்று மாஜிஸ்டிரேட்டைக் கேட்டுக் கொண்டேன். பின்வருமாறு சுருக்கமாக என் வாக்குமூலத்தையும் படித்தேன்: கி. பு. கோ. 144-வது பிரிவின் கீழே பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவை நான் மீறிவிட்டதாகத் தோன்றும் இக் கடுமையான நடவடிக்கையை நான் ஏன் மேற்கொண்டேன் என்பதைக் காட்ட, கோர்ட்டாரின் அனுமதியின் பேரில், சுருக்கமான ஒரு வாக்குமூலத்தைக் கொடுக்க விரும்புகிறேன். உள்ளூர் அதிகாரிகளுக்கும் எனக்கும் உள்ள மாறுபட்ட அபிப்பிராயத்தைப் பற்றிய விஷயமே இது என்பதுதான் என் தாழ்மையான அபிப்பிராயம். ஜீவ காருண்ய, தேசிய சேவை செய்வது என்ற நோக்கத்தின் பேரில் நான் நாட்டில் பிரவேசித்தேன். அவுரித் தோட்ட முதலாளிகள் தங்களை ஒழுங்காக நடத்தவில்லை என்று விவசாயிகள் திடமாகக் கூறுகின்றனர். வந்து உதவி செய்ய வேண்டும் என்று அவர்கள் வற்புறுத்தி அழைத்ததன் பேரில் நான் இங்கே வந்தேன்.
பிரச்னையை ஆராய்ந்து பாராமல் நான் எந்தவிதமான உதவியையும் செய்துவிட முடியாது. ஆகையால், சாத்தியமானால் அரசாங்க நிர்வாகிகள், தோட்ட முதலாளிகள் இவர்களின் ஒத்துழைப்புடன் நிலைமையை ஆராயவே நான் வந்திருக்கிறேன். இதைத் தவிர எனக்கு வேறு எந்தவிதமான நோக்கமும் இல்லை. நான் வந்திருப்பதால் பொது ஜன அமைதிக்குப் பாதகம் ஏற்படும் என்றோ, உயிர்ச்சேதம் ஏற்பட்டு விடும் என்றோ நான் நம்ப முடியாது. இத்தகைய விஷயங்களில் எனக்கு அதிக அனுபவம் உண்டு. ஆனால், அதிகாரிகளோ, வேறுவிதமாக எண்ணிவிட்டார்கள். அவர்களுக்குள்ள கஷ்டங்களையும் நான் முற்றும் உணருகிறேன். தங்களுக்குக் கிடைத்த தகவல்களைக் கொண்டே அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கிறது என்பதையும் ஒப்புக் கொள்கிறேன். சட்டத்திற்கு கட்டுப்பட்டு நடக்கும் பிரஜை நான். ஆகவே, எனக்குப் பிறப்பிக்கப்பட்டிருக்கும் உத்தரவுக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்பதே எனக்கு ஏற்படும் முதல் எண்ணம். ஆனால், நான் யாருக்காக வந்திருக்கிறேனோ அவர்களுக்கு ஆற்ற வேண்டிய கடமையை நான் சட்டத்தை மீறாமல் செய்துவிட முடியாது.
அவர்களுக்கு நடுவில் நான் இருப்பதனாலேயே அவர்களுக்கு நான் இப்பொழுது சேவை செய்ய முடியும் என்று உணருகிறேன். ஆகையால், இங்கிருந்து நானாக வலியப் போய்விட முடியாது. இவ்வாறு முரண்பட்ட கடமைகள் ஏற்பட்டிருக்கும் போது, அவர்களிடமிருந்து என்னை அப்புறப்படுத்திவிடும் பொறுப்பை நான் அதிகாரிகளின் மீதே போட முடியும். இந்தியாவின் பொது வாழ்க்கையில் என்னைப் போன்றதோர் நிலையில் இருப்பவன், பிறர் பின்பற்றுவதற்கான காரியத்தைச் செய்வதில் அதிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதை முற்றும் அறிந்தே இருக்கிறேன். நாங்கள் இன்று ஒரு சிக்கலான அரசியல் அமைப்பின் கீழ் வாழ்கிறோம். இதில் சுயமதிப்புள்ள ஒருவன், எனக்கு ஏற்பட்டிருப்பதைப் போன்ற சந்தர்ப்பத்தில், அனுசரிக்கக் கூடிய பத்திரமான, கௌரவமான முறை, நான் செய்ய முடிவு செய்திருப்பதைப் போன்று தடை உத்தரவை மீறி, அதற்குரிய தண்டனையை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளுவதேயாகும். இந்த வாக்குமூலத்தைக் கொடுக்க நான் முற்பட்டிருப்பதன் நோக்கம், எனக்குக் கொடுக்கவிருக்கும் தண்டனையை எந்த விதத்திலும் குறைத்துக்கொள்ளும் முயற்சி அன்று. தடை உத்தரவை மதிக்க நான் மறுத்திருப்பது, சட்டப்படி ஏற்பட்டிருக்கும் அதிகாரத்தினிடம் எனக்கு மதிப்பு இல்லாததனால் அல்ல; சட்டங்களுக்கெல்லாம் மேலான சட்டமாகிய மனச்சாட்சியின் குரலுக்குக் கீழ்ப்படிந்தே இவ்விதம் செய்கிறேன் என்பதைக் காட்டுவதற்கேயாகும்.
இவ்விதம் நான் வாக்குமூலம் கொடுத்துவிட்ட பிறகு விசாரணையை ஒத்தி வைப்பதற்குக் காரணமில்லை. ஆனால் நான் இப்படி வாக்குமூலம் கொடுப்பேன் என்று எதிர்பாராததனால் மாஜிஸ்டிரேட், அரசாங்க வக்கீல் ஆகிய இருவருமே திடுக்கிட்டுப் போனார்கள். மாஜிஸ்டிரேட், தீர்ப்புக் கூறுவதை ஒத்திவைத்தார். இதற்கு மத்தியில் முழு விவரங்களையும் நான் வைசிராய்க்கும், பாட்னா நண்பர்களுக்கும், பண்டித மதன் மோகன மாளவியாவுக்கும், மற்றவர்களுக்கும் தந்தி மூலம் அறிவித்தேன். தண்டனையை ஏற்றுக்கொள்ளுவதற்கு நான் கோர்ட்டில் ஆஜராவதற்கு முன்னாலேயே மாஜிஸ்டிரேட் எழுத்து மூலம் எனக்குத் தகவலை அனுப்பிவிட்டார். என் மீதுள்ள வழக்கை வாபஸ் வாங்கிக் கொள்ளும்படி கவர்னர் உத்தரவிட்டிருக்கிறார் என்று அதில் அவர் கூறியிருந்தார். கலெக்டரும் எனக்கு ஒரு கடிதம் எழுதினார். நான் நடத்தவிருந்த விசாரணையை நான் தாராளமாக நடத்திக் கொண்டு போகலாம் என்றும், எனக்கு வேண்டிய உதவி அதிகாரிகளிடமிருந்து கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்தார். இவ்வளவு விரைவில், இவ்விஷயம் இப்படி மகிழ்ச்சிகரமான வகையில் தீர்ந்துவிடும் என்று எங்களில் யாரும் எதிர்பார்க்கவே இல்லை. கலெக்டர் ஸ்ரீஹேகாக்கைப் பார்க்கப் போனேன். அவர் நல்லவராகவும், நியாயத்தைச் செய்யவேண்டும் என்பதில் ஆவலுள்ளவராகவுமே காணப்பட்டார். பார்க்க விரும்பும் தஸ்தாவேஜு களை நான் கேட்கலாம் என்றும், நான் விரும்பும் போதெல்லாம் தம்மை வந்து காணலாம் என்றும் அவர் கூறினார். இவ்விதம் சாத்விகச் சட்ட மறுப்பில் முதல் உதாரண பாடத்தை நாடு பெற்றது. சம்பாரணில் எங்கும் இதைக் குறித்தே பேசினர். பத்திரிகைகளும் தாராளமாக எழுதின. இதனால், நான் மேற்கொண்ட விசாரணைக்கு எதிர்பாராத விளம்பரமும் கிடைத்தது.
அரசாங்கம் நடுநிலைமை வகிக்க வேண்டியது என் விசாரணைக்கு மிகவும் அவசியமானது. ஆனால், பத்திரிகை நிருபர்களின் உதவியும், பத்திரிகைகளில் தலையங்கம் எழுதி ஆதரிப்பதும் இந்த விசாரணைக்குத் தேவையில்லை. உண்மையில் சம்பாரணில் இருந்த நிலைமை, மிக ஜாக்கிரதையாகக் கையாள வேண்டிய கஷ்டமான நிலைமை. ஆகையால், அதிகப்படியாகக் கண்டித்து எழுதிவிடுவதோ, மிகைப்படுத்தி விடும் செய்திகளோ நான் அடைய முற்பட்டிருந்த லட்சியத்திற்குத் தீமை விளைவித்து விடக்கூடும். எனவே, முக்கியமான பத்திரிகைகளின் ஆசிரியர்களுக்கெல்லாம் கடிதம் எழுதினேன். பிரசுரிக்க வேண்டியது அவசியம் என்று இருப்பதை நானே எழுதுவதாகவும், நிலைமையை அப்போதைக்கப்போது அவர்களுக்குத் தெரிவித்துக் கொண்டிருப்பதாகவும் நான் எழுதியதோடு, நிருபர்களை அனுப்பும் சிரமம் அவர்களுக்கு வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டேன். நான் சம்பாரணில் இருப்பதை அங்கீகரித்துவிட்ட அரசாங்கத்தின் போக்கு, தோட்ட முதலாளிகளுக்கு அதிக அதிருப்தியை உண்டாக்கிவிட்டது என்பதை அறிவேன். அதிகாரிகள், பகிரங்கமாக எதுவும் சொல்ல முடியாவிட்டாலும், இந்த நிலைமையை அவர்களும் உள்ளூர விரும்பமாட்டார்கள் என்பதும் எனக்குத் தெரியும். ஆகையால், தவறான, தப்பான அபிப்பிராயத்தை உண்டாக்கிவிடக்கூடிய செய்திகள் பிரசுரமாவதால், அவர்களுடைய குரோதமே மேலும் அதிகமாகும்.
அவர்களுடைய ஆத்திரம் என் மீது பாய்வதற்குப் பதிலாக, இப்பொழுதே பயந்து நடுங்கிக் கொண்டிருக்கும் ஏழை விவசாயிகள் மீதே பாய்ந்துவிடும். அதோடு அங்கிருக்கும் நிலைமையைப் பற்றிய உண்மையைக் கண்டு கொள்ள நான் முற்பட்டிருப்பதற்கும் இடையூறு ஏற்படும். இவ்வளவு தூரம் முன்னெச்சரிக்கையுடன் நான் நடந்து கொண்டும், தோட்டக்காரர்கள் எனக்கு எதிராக விஷமமான கிளர்ச்சிகளையெல்லாம் செய்தார்கள். என்னைப் பற்றியும், என் சக ஊழியர்களைக் குறித்தும் எல்லாவிதமான புளுகுகளும் பத்திரிகைகளில் பிரசுரமாயின. ஆனால், நான் மிகவும் தீவிரமான முன் ஜாக்கிரதையுடன் இருந்ததாலும், மிகச் சிறிய விஷயத்தில் கூட உண்மையை நான் வற்புறுத்தி வந்ததாலும், அவர்களுடைய பிரச்சாரம் அவர்களுக்கே தீமையாக முடிந்துவிட்டது. பிரஜ்கி÷ஷார் பாபுவின் பெயரைக் கெடுத்துவிடத் தோட்ட முதலாளிகள் சகலவிதமான முயற்சிகளையும் செய்தார்கள். ஆனால், அவர் மீது எவ்வளவுக்கெவ்வளவு அவர்கள் அவதூறுகளைக் கூறினார்களோ அவ்வளவுக்கவ்வளவு அவருக்கு மக்களிடையே மதிப்பு அதிகரித்தது.
இப்படி அதிக ஜாக்கிரதையாகக் காரியம் செய்ய வேண்டியிருந்த நிலையில், மற்ற மாகணங்களிலிருந்த தலைவர்கள் யாரையும் அழைப்பது சரியல்ல என்று எண்ணினேன். தமக்குத் தகவல் அனுப்பியதும், நான் விரும்பும்போது உடனே வரத் தாயாராக இருப்பதாகப் பண்டித மாளவியா எனக்கு வாக்குறுதி அனுப்பி இருந்தார். ஆனால், அவருக்கு நான் தொந்தரவு கொடுக்கவில்லை. இப்போராட்டம் ஒரு ராஜீயப் போராட்டம் ஆகிவிடாதபடி பார்த்துக்கொண்டேன். ஆனால், தலைவர்களுக்கும், முக்கியமான பத்திரிகைகளுக்கும் - பிரசுரிப்பதற்காக அல்ல - அவர்கள் அறிந்திருக்க வேண்டும் என்பதற்காக, அப்போதைக்கப்போது சமாச்சாரத்தை அறிவித்து வந்தேன். ராஜீயக் கலப்பில்லாத ஒரு போராட்டத்தின் முடிவு, ராஜீயப் பலனுடையதாகவே இருக்கலாம். ஆயினும், அப்போராட்டத்திற்கு ராஜீயத் தோற்றத்தை அளித்துவிடுவதானால், அதற்குத் தீமையையே உண்டாக்கி விடுகிறோம் என்பதைப் பார்த்திருக்கிறேன். ஆகவே ராஜீயக் கலப்பில்லாமல் வைத்திருப்பதனாலேயே அதற்கு உதவி செய்ய முடியும். மக்களுக்குத் தன்னலமற்ற வகையில் எந்தத் துறையில் தொண்டு செய்தாலும், முடிவில் அது நாட்டிற்கு ராஜீய வகையில் உதவி செய்வதாகவே ஆகும். இந்த உண்மைக்குச் சம்பாரண் போராட்டம் ஒரு ருசுவாகும்.