பதிவு செய்த நாள்
10
அக்
2011
01:10
சம்பாரண் விசாரணையின் முழு விவரத்தையும் கூறுவதென்றால், சம்பாரண் விவசாயிகள் அச்சமயத்தில் இருந்த நிலைமையைப் பற்றிக் கூறுவதாகவே அது ஆகும். ஆனால் இந்த அத்தியாயங்களுக்கு அது பொருத்தம் இல்லாதது. சம்பாரண் விசாரணை, சத்தியம், அகிம்சை ஆகியவற்றில் ஒரு தைரியமான சோதனையேயாகும். அந்த நோக்கத்துடன் பார்க்கும்போது, எழுதத் தக்கவை என்று எனக்குத் தோன்றுகிறவைகளை மாத்திரமே நான் வாரந்தோறும் எழுதிக்கொண்டு வருகிறேன். இந்த விசாரணையைக் குறித்து மேலும் விவரமாக அறிய விரும்புவோர், ஹிந்தியில் ஸ்ரீ ராஜேந்திரப் பிரசாத் எழுதியிருக்கும் சம்பாரண் சத்தியாக்கிரகம் என்ற நூலைப் பார்க்கவும். அதன் ஆங்கிலப் பதிப்பும் இப்பொழுது அச்சாகிக்கொண்டு வருகிறது என்பதை அறிகிறேன். இந்த அத்தியாயத்திற்கு உரிய விஷயத்தை இனிக் கவனிப்போம். கோரக் பாபு தம் வீட்டைக் காலிசெய்துவிட்டு, வேறிடத்திற்குச் செல்லும்படி செய்யாமல் அவர் வீட்டிலேயே இந்த விசாரணையை நடத்தி வருவது என்பது இயலாத காரியம்.
எங்களுக்குத் தங்கள் வீட்டை வாடகைக்குக் கொடுக்கும் அளவுக்கு மோதிகாரி மக்களுக்கு இன்னும் பயம் போய்விடவில்லை. என்றாலும், பிரஜ்கி÷ஷார் பாபு சாமர்த்தியமாக ஒரு வீட்டைப் பிடித்துவிட்டார். அதைச் சுற்றித் திறந்த இடம் நிறைய உண்டு. அவ்வீட்டிற்கு நாங்கள் மாறினோம். பணம் இல்லாமல் வேலையை நடத்திக்கொண்டு போவது என்பதும் சாத்தியமாக இல்லை. இது போன்ற வேலைக்குப் பண உதவி செய்யுமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் வெளியிடும் வழக்கமும் இதுவரை இல்லை. பிரஜ்கி÷ஷாரும் அவர் நண்பர்களும் முக்கியமான வக்கீல்கள். அவர்களே பணம் கொடுத்து வந்தார்கள். சமயம் நேர்ந்த பொழுதெல்லாம் நண்பர்களிடமிருந்தும் பெற்று வந்தனர். பணம் கொடுக்கக் கூடிய வசதியில் தாங்களும், தங்களைப் போன்றவர்களுமே இருக்கும்போது பண உதவி செய்யுமாறு பொதுமக்களை அவர்கள் எப்படிக்கேட்க முடியும்? அதுவே வாதம் என்று தோன்றியது. சம்பாரண் விவசாயிகளிடமிருந்து எந்தவிதமான பண உதவியையும் ஏற்றுக்கொள்ளுவதில்லை என்று முடிவு செய்துகொண்டுவிட்டேன். ஏனெனில், தவறான அபிப்பிராயம் ஏற்படுவதற்கு அது நிச்சயம் இடம் கொடுத்துவிடும்.
இந்த விசாரணையை நடத்துவதற்காக என்று பண உதவி கோரிப் பொதுவாகத் தேச மக்களுக்கு வேண்டுகோள் வெளியிடுவதில்லை என்றும் உறுதி செய்துகொண்டேன். ஏனெனில், அவ்விதம் தேச மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தால், இது அகில இந்திய விஷயமாகவும், ராஜீய விஷயமாகவும் ஆகி விடக்கூடும். பம்பாயிலிருந்து நண்பர்கள் ரூ. 15,000 கொடுப்பதாகக் கூறினர். ஆனால், அவர்களுக்கு வந்தனம் கூறி, அதை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டேன். பிரஜ்கி÷ஷார் பாபுவின் உதவியைக் கொண்டு சம்பாரணுக்கு வெளியிலிருக்கும் பணக்காரர்களான பீகாரிகளிடம் இருந்து எவ்வளவு முடியுமோ அவ்வளவு வசூலித்துக்கொள்ளுவது, மேற்கொண்டும் தேவைப்பட்டால் ரங்கூனிலிருந்த என் நண்பர் டாக்டர் பி. ஜே. மேத்தாவிடம் கேட்பது என்று முடிவு செய்து கொண்டேன். எவ்வளவு தேவைப்பட்டாலும் அனுப்புவதாக டாக்டர் மேத்தா உடனே ஒப்புக்கொண்டார். இவ்விதம் பணத்தைப் பற்றிய கவலையே எங்களுக்கு இல்லாது போயிற்று. சம்பாரணில் வறுமை நிலைமைக்கு ஏற்ற வகையில் மிகவும் சிக்கனமாகவே செலவு செய்வது என்று நாங்கள் உறுதி கொண்டதால், பெருந்தொகை எங்களுக்குத் தேவைப்படுவதற்கும் இல்லை. உண்மையில், பெருந்தொகை எங்களுக்குத் தேவைப்படவில்லை என்பதையே முடிவிலும் கண்டோம். மொத்தத்தில் மூவாயிரம் ரூபாய்க்கு மேல் நாங்கள் செலவு செய்யவில்லை என்றே எனக்கு ஞாபகம். நாங்கள் வசூலித்ததில் சில நூறு ரூபாய்களை மீதப்படுத்தியும் விட்டோம்.
ஆரம்ப நாட்களில் என்னுடைய சகாக்கள் விசித்திரமான வகையில் வாழ்க்கையை நடத்தி வந்தனர். இதைக் குறித்து நான் இடைவிடாமல் அவர்களைப் பரிகாசம் செய்து வந்தேன். அந்த வக்கீல்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு வேலைக்காரன், ஒரு சமையற்காரன் ஆகையால் ஒவ்வொருவருக்கும் தனித் தனிச் சமையல், இரவில் நடுநிசியில் கூடச் சாப்பிடுவார்கள். அவர்கள் தங்கள் செலவுக்குத் தாங்களே ஏற்பாடு செய்துகொண்ட போதிலும், கால நேர ஒழுங்கின்றி அவர்கள் நடந்துகொண்டு வந்தது எனக்கு ஒரே கவலையாக இருந்தது. நாங்கள் மிகவும் நெருங்கிய நண்பர்கள் ஆகிவிட்டதால், எங்களுக்குள் தவறான அபிப்பிராயங்கள் ஏற்பட்டுவிடும் என்பதற்கில்லை. நான் பரிகாசம் செய்ததை நல்ல உணர்ச்சியுடனேயே அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள். முடிவில், வேலைக்காரர்களையெல்லாம் அனுப்பி விடுவது, எல்லாச் சமையல்களையும் ஒன்றாக்கி விடுவது, குறிப்பிட்ட கால முறையை அனுசரிப்பது என்று ஒப்புக் கொண்டார்கள். அவர்கள் எல்லோருமே சைவ உணவு சாப்பிடுகிறவர்கள் அல்ல. ஆனால் இரண்டு வகைச் சமையல் என்றால் செலவு அதிகம் ஆகும். ஆதலால் சைவச் சமையலே வைத்துக் கொள்ளுவது என்றும் தீர்மானமாயிற்று.
சாப்பாடு எளிமையாக இருக்க வேண்டும் என்று வற்புறுத்துவது அவசியம் என்றும் கருதப்பட்டது. இந்த ஏற்பாடுகள், எங்கள் செலவை அதிக அளவுக்குக் குறைத்துவிட்டன. அதோடு ஏராளமான நேரமும் உழைப்பும் மீதமாயின. இவை இரண்டும் நாங்கள் மேற்கொண்டிருந்த வேலைக்கு மிகவும் தேவையாகவும் இருந்தன. எங்களிடம் வாக்கு மூலம் கொடுக்க விவசாயிகள் கூட்டம்கூட்டமாக வந்தார்கள். அப்படி வந்தவர்களுடன் அவர்களுடைய தோழர்களும் ஏராளமாக வந்தனர். நாங்கள் இருந்த வீட்டைச் சுற்றியிருந்த திறந்த வெளியிலும் தோட்டத்திலும் இருக்க இடம் போதாத வகையில் பெருங்கூட்டம் இருந்து வந்தது. என்னைத் தரிசிப்பதற்கென்று வருபவர்களிடமிருந்து என்னைக் காப்பதற்காக என் சகாக்கள் எடுத்துக் கொண்ட முயற்சி அடிக்கடி பயன் பெறுவதில்லை. ஆகையால், குறிப்பிட்ட நேரத்தில் என்னைத் தரிசனத்திற்குக் காட்சிப் பொருள்போல் வைக்கவேண்டியிருந்தது. வாக்குமூலங்களை எழுதிக் கொள்ளுவதற்கு மாத்திரம் ஐந்து முதல் ஏழு தொண்டர்கள் வேண்டியிருந்தது. அப்படியும் வந்தவர்களில் சிலர் வாக்குமூலம் கொடுக்க முடியாமலே மாலையில் வீடு திரும்ப வேண்டியதாயிற்று. இந்த வாக்குமூலங்கள் எல்லாமே முக்கியமானவை அல்ல; முன்னால் சிலர் சொன்னவற்றையே சிலர் திரும்பத் திரும்பச் சொல்லியிருந்தார்கள். என்றாலும், தாங்களும் வாக்குமூலம் கொடுக்காவிட்டால், அம்மக்கள் திருப்தியடையமாட்டார்கள். இவ்விஷயத்தில் அவர்களுடைய உணர்ச்சியை நான் பாராட்டினேன்.
வாக்குமூலங்களைப் பதிவு செய்துகொண்டவர்கள், சில விதிகளை அனுசரிக்க வேண்டும். ஒவ்வொரு விவசாயியையும் சரியானபடி குறுக்கு விசாரணை செய்து, அந்தச் சோதனையில் திருப்திகரமாக இல்லாதவர்களின் வாக்குமூலங்கள் நிராகரிக்கப்பட்டன. இவ்விதம் செய்வதில் அதிகநேரம் செலவான போதிலும் பதிவான வாக்குமூலங்களில் பெரும்பாலானவை சிறிதும் ஆட்சேபிக்க முடியாதவைகளாயின. இந்த வாக்கு மூலங்களைப் பதிவு செய்யும் போது, ரகசியப் போலீஸைச் சேர்ந்த ஓர் அதிகாரி எப்பொழுதும் அங்கே இருந்து கொண்டிருப்பார். அவர் அவ்விதம் அங்கில்லாதபடி நாங்கள் தடுத்திருக்க முடியும். ஆனால், ரகசியப் போலீஸ் அதிகாரிகள் இருப்பதை நாங்கள் பொருட்படுத்தாமல் இருந்து விடுவதோடு, அவர்களை மரியாதையாகவும் நடத்தி, அவர்களுக்குத் தெரிவிக்கக்கூடிய தகவல்களையெல்லாம் தெரிவிப்பது என்றும் ஆரம்பத்திலிருந்தே நாங்கள் முடிவு செய்திருந்தோம். இதனால் எங்களுக்கு எந்தவிதமான தீங்கும் நேர்ந்து விடவில்லை. இதற்கு மாறாக, ரகசியப் போலீஸ் அதிகாரிகளுக்கு முன்னாலேயே வாக்குமூலங்கள் பதிவு செய்யப்படுகின்றன என்பது,குடியானவர்களை மேலும் பயம் இல்லாதவர்களாக்கியது.
ரகசியப் போலீஸைக் குறித்து விவசாயிகளுக்கு இருந்த அளவு கடந்த பயம் ஒருபுறத்தில் அவர்கள் மனத்தில் இருந்து விரட்டப் பட்டதோடு மற்றோர் புறத்தில் அந்த அதிகாரிகள் இருந்ததால் வாக்குமூலத்தை மிகைப்படுத்திக் கூறிவிடாதிருப்பதற்கும் விவசாயிகளுக்கு அது இயற்கையாகவே ஒரு தடையாகவும் இருந்தது. மக்களை வலையில் சிக்கவைத்து விடுவது ரகசியப் போலீஸ் நண்பர்களின் வேலை. ஆகவே, விவசாயிகள் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியமாயிற்று. தோட்ட முதலாளிகளுக்கு எரிச்சலை உண்டாக்க நான் விரும்பவில்லை. ஆனால், கௌரவமாக நடந்துகொள்ளுவதன் மூலம் அவர்கள் மனத்தைக் கவர நான் விரும்பினேன். ஆகையால், எந்தத் தோட்ட முதலாளிகள் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் கூறப்பட்டனவோ அவர்களுக்கு எழுதுவது, அவர்களைச் சந்தித்துப்பேசுவது என்று வைத்துக்கொண்டேன். தோட்டக்காரர்கள் சங்கத்தினரையும் சந்தித்தேன். விவசாயிகளின் குறைகளை அவர்களுக்கு எடுத்துக் கூறியதோடு தோட்ட முதலாளிகளின் கருத்தையும் தெரிந்துகொண்டேன். இந்தத் தோட்ட முதலாளிகளில் சிலர் என்னை வெறுத்தார்கள்; சிலர் என்னை அலட்சியம் செய்தனர்; மற்றும் சிலரோ, என்னை மரியாதையுடன் நடத்தினார்கள்.