ரபியுல்அவ்வல் 12ம் நாளில், நபிகள் நாயகம் பிறந்தார். இந்த நாளையே மிலாடி நபி என்கின்றனர். அவரது ஒவ்வொரு அறிவுரையும் மானிட இனத்துக்கு ஒரு பாடம். இதோ அவர் சொல்லும் நல்ல அறிவுரைகளைக் கேட்போம்.
*கடமையில் கவனமாக இருக்க வேண்டும். தங்களுக்கு தரப்பட்டுள்ள பொறுப்பை மிகுந்த அக்கறையுடன் செய்ய வேண்டும். *ஒரு குடும்பத்தில் மனைவியையும், பெற்றோரையும் திருப்திப்படுத்தும் பொறுப்பை ஒரு ஆண் ஏற்க வேண்டும். பெற்றோரிடம் நல்ல முறையில் நடந்து உபகாரம் செய்பவர், அதே போல தங்கள் மனைவிக்கும் உபகாரம் செய்ய வேண்டும். *உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே. நீங்கள் ஒவ்வொருவரும் அவரவர் பொறுப்பு குறித்து மறுமையில் விசாரிக்கப்படுவீர்கள். ஒரு தலைவர் நாட்டின் பொறுப்பாளர். அவர் தம் குடிமக்கள் குறித்து விசாரிக்கப்படுவார். *ஒரு ஆண் தனது குடும்பத்தின் பொறுப்பாளர். அவன் தன் பொறுப்புக்கு உட்பட்டவர்கள் பற்றி விசாரிக்கப்படுவான். *பெண் தனது கணவரின் வீட்டிற்கு பொறுப்பாளர். அவள் அந்த பொறுப்பு குறித்து விசாரிக்கப்படுவாள். *பணியாளன் தனது எஜமானனின் செல்வத்திற்கு பொறுப்பாளன். அவன் தனக்குரிய பொறுப்பு குறித்து விசாரிக்கப்படுவான். *நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளர்களே. தத்தமது பொறுப்பு குறித்து விசாரிக்கப்படுவீர்கள். *இப்படி எல்லாரும் எல்லாவற்றையும் பொறுப்புடன் செய்ய வேண்டும் என்கிறார் நாயகம்.