பதிவு செய்த நாள்
14
டிச
2016
10:12
சபரிமலை: சபரிமலை அபிவிருத்திக்காக, 131 கோடி ரூபாய் செலவில், 20 திட்டங்கள் தயாரிக்கப்பட்டு உள்ளது. திருவனந்தபுரத்தில், நாளை நடக்கும் உயர் அதிகார கமிட்டி கூட்டத்தில் இதற்கு இறுதி வடிவம் கொடுக்கப்பட உள்ளது. சபரிமலையில், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பக்தர்கள் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு தேவசம் போர்டு, திட்டங்களை தயாரித்து வருகிறது. இதற்கு சபரிமலை உயர் அதிகார கமிட்டி அனுமதி அளிக்க வேண்டும். தற்போது தேவசம்போர்டு சார்பில், சபரிமலை சன்னிதானத்தில் மட்டும், 20 திட்டங்கள் தயாரிக்கப்பட்டு உள்ளது.
’பேட்டரி’ கார்கள் : பெரிய நடைப்பந்தல் முதல், சந்திராங்கதன் ரோடு வரை புதிய பாலத்திற்கு, 23 கோடி ரூபாய். குப்பையை எரிக்கும் பிளான்ட் அமைக்க, 10 கோடி ரூபாய். இரண்டு மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் சோலார் பிளான்டுக்கு, 9 கோடி ரூபாய், பஸ்மகுளம் புதுப்பித்தல், 8 கோடி ரூபாய். சன்னிதானத்தில் இருந்து நுணங்காற்றில் கலக்கும் தண்ணீரை சுத்திகரித்து, கழிப்பறைக்கு பயன்படுத்தும் திட்டத்திற்கு இரண்டு கோடி ரூபாய். அரவணை அப்பம் பிரசாதங்களை தயாரிக்கும் இடத்தில் இருந்து விற்பனை கவுன்டர்களுக்கு எடுத்து செல்ல, பேட்டரி கார்கள் வாங்க, 2.5 கோடி. பெய்லி பாலம் அருகே நிரந்தர தடுப்பணை கட்டி தண்ணீரை தேக்கி சுத்திகரிக்க, 3 கோடி. பாண்டிதாவளத்தில், 50 லட்சம் லிட்டர் கொள்ளவு குடிநீர் தொட்டி அமைக்க, 9 கோடி ரூபாய். சுவாமி அய்யப்பன் சாலையை நவீனப்படுத்த, 5 கோடி ரூபாய். சர்க்கரை குடோன் கட்ட, 6 கோடி, போன்றவை இந்த திட்டங்களின் முக்கிய அம்சங்களாகும்.
விரிவான ஏற்பாடுகள் : பம்பை முதல் சன்னிதானம் வரும் பாதைகளில், எல்.இ.டி., விளக்குகள் அமைக்கவும், பாண்டித் தாவளத்தில் கூடுதல் பக்தர்கள் தங்குவதற்கு வசதியாக ஷெட்டுகள் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு திட்டங்களும் இதில் இடம்பெற்றுள்ளது. நாளை, திருவனந்தபுரத்தில் சபரிமலை உயர் அதிகார கமிட்டி தலைவர் ஜெயக்குமார் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில், இந்த திட்டங்களுக்கு இறுதி வடிவம் கொடுக்கப்படுகிறது. பக்தர்கள் வசதிக்காக, மூலிகை குடிநீர் கூடுதல் இடங்களில் வழங்க தேவசம் போர்டு ஏற்பாடு செய்து உள்ளது. கேரள ஐகோர்ட் உத்தரவு படி, சபரிமலையில் இந்த ஆண்டு, பிளாஸ்டிக் பாட்டில் குடிநீர் முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து பக்தர்களுக்கு குடிநீர் வழங்க, கேரள அரசு குடிநீர் வாரியமும் தேவசம்போர்டும் விரிவான ஏற்பாடுகள் செய்துள்ளன. குடிநீர் வாரியம் சார்பில், பக்தர்கள் வரும் பாதைகளில் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து குழாய்கள் மூலம் தண்ணீர் வழங்கி வருகிறது. பிளாஸ்டிக் பாட்டில் குடிநீர் தடை செய்யப்பட்டதன் மூலம் பக்தர்கள் குடிநீர் இல்லாமல் சிரமப்படக் கூடாது என்பதில் அரசும் தேவசம்போர்டும் கவனமாக இருக்கிறது.
மூலிகை குடிநீர் : தேவசம் போர்டு சார்பில், பம்பை முதல் சன்னிதானம் வரை, 30 இடங்களில் மூலிகை குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. சுக்கு, பதிமுகம், ராமிச்சம் வேர் ஆகிய பொருட்களுடன் தண்ணீர் கொதிக்க வைத்து வழங்குவது மூலிகை குடிநீர். மலை ஏறி களைப்பில் வரும் பக்தர்களுக்கு, இது உத்வேகத்தை கொடுக்கிறது. தற்போது மேலும், 10 இடங்களில் இந்த குடிநீர் வழங்கப்படுவதை தொடர்ந்து மொத்தம், 40 இடங்களில், பக்தர்களுக்கு மூலிகை குடிநீர் கிடைக்கிறது.