சுகாதாரக்கேடில் கோயில் தெப்பம்: அலட்சியத்தில் அறநிலையத்துறை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14டிச 2016 11:12
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை மீனாட்சி சொக்கநாதர் கோயிலின் தெப்பம் சுகாதார கேட்டில் சிக்கி உள்ளது.அறநிலைய துறையின் அலட்சியத்தில் இந்நிலை தொடர்வதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். அருப்புக்கோட்டை சொக்கலிங்புரத்தில் இந்து சமய அறநிலைய துறை கட்டுப்பாட்டில் உள்ளது நுாற்றாண்டு புகழ் வாய்ந்த மீனாட்சி சொக்கநாதர் கோயில். இக் கோயில் தெப்பகுளம் அந்த காலத்தில் புகழ் வாய்ந்ததாகவும், சூரிய புஷ்கரணி என்றும் அழைக்கப்பட்டது. ஒரு மன்னரின் சாப விமோசனத்திற்காக கோயிலும், தெப்பமும் கட்டப்பட்டது. தெப்ப குளத்தில் குளித்தால் தீராத நோய்களும் தீரும் என்பது ஐதீகம் போன்ற வரலாற்று குறிப்புகள் உள்ளன. அத்தகைய புகழ் வாய்ந்த தெப்பத்தை முறையான பராமரிக்காமல் அறநிலைய துறை விட்டு விட்டது. இதனால் தெப்பத்திற்கும் தண்ணீர் வரும் வழிகளும் அடைப்பட்டு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு முட்புதர்களால் சூழப்பட்டுள்ளது. மழை நீர் வராது ஓட்டலின் கழிவு, குப்பை கழிவுகள் தான் வந்து சேர்கின்றன. கழிவு நீரில் பன்றிகள் புரண்டு குளிக்கின்றன. ஒரு காலத்தில் தெப்பத்தில் தண்ணீர் தேங்க தெப்பத்தை சுற்றிய வீடுகளில் போர்வெல் தண்ணீர் தட்டுப்பாடு இன்றி கிடைத்தது. கோடை காலத்தில் கூட தண்ணீர் பஞ்சம் வராமல் இருந்தது. தற்போது தெப்பம் வறண்டு கழிவு நீர் மட்டும் தேங்கி காணப்படுகிறது. இந்து சமய அறநிலைய துறை தெப்பத்தை துார் வார நடவடிக்கை எடுக்காமல் மெத்தனத்தில் உள்ளது. தெப்பத்தை சுற்றி நடைபாதை மற்றும் மின் விளக்குகள் அமைத்து, தெப்பத்தை முறையாக இந்து சமய அறநிலையத்துறை பராமரிக்க வேண்டும் என்பது பொதுமக்களின் வேண்டுகோளாக உள்ளது.