சிவன் கோயில் அருகே குப்பை முகம் சுளிக்கும் பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14டிச 2016 11:12
சிவகாசி: சிவகாசி சிவன் கோயில் அருகே கொட்டப்படும் குப்பையை அகற்ற தாமதம் ஏற்படுவதால் பக்தர்கள் முகம் சுளிக்கின்றனர். துர்நாற்ற பிரச்னை உள்ளதால், மக்கள் சிரமப்படுகின்றனர். சிவகாசியில் விஸ்வநாதசுவாமி, விசாலாட்சி அம்மாள் எனும் சிவன் கோயில் உள்ளது. விசேஷ நாட்களில் சுவாமி தரிசனத்திற்கு கூட்டம் இருக்கும். கோயில் மாடவீதி காலனி அருகே நகராட்சி சார்பில் பிளாஸ்டிக் குப்பைதொட்டி வைக்கப்பட்டுள்ளது. இது பெரும்பாலும் பூட்டப்பட்டு இருக்கும். தொட்டியை சுற்றி, எச்சில் இலை, ஓட்டல் கழிவு, பாலிதீன் கவர், கழிவு குப்பை கொட்டப்படுகின்றன. குறுகிய தெருவாக இருப்பதால் குப்பை பாதி ரோட்டை அடைத்துவிடுகிறது. வாகனங்கள் செல்ல இடையூறு ஏற்படுகிறது. பல நாட்களாக குப்பையை அகற்றாததால், துர்நாற்றம் ஏற்படுகிறது. இதனை கடந்து செல்லும் பக்தர்கள் மூக்கை பிடித்துக்கொண்டு, முகம் சுளிக்கின்றனர். சுத்தமாக இருந்த சிவகாசியில், கோயில் அருகே இந்த சுகாதார கேடு என பக்தர்கள் புலம்புகின்றனர். நகராட்சியில் மக்கள் பிரதிநிதிகள் இருந்தபோது சுகாதாரம் மோசமாக இருந்தது. அவர்களது பதவிக்காலம் முடிந்து அதிகாரிகள் வசம் பொறுப்பு சென்ற பின் சுகாதார பிரச்னை தீரும் என நினைத்த மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். நகர் துாய்மையாக மாற நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே மக்களின் விருப்பம்.