பதிவு செய்த நாள்
14
டிச
2016
11:12
பெ.நா.பாளையம்: பெத்தநாயக்கன்பாளையம் தாலுகாவிலுள்ள, சிவாலயங்களில் கார்த்திகை தீபத்தையொட்டி திருக்கோடி தீபம் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடந்தன. கொட்டவாடி, பேளூர் கரடிப்பட்டியில் கார்த்திகை தீபத்தையொட்டி, ஊர் பொதுமக்கள் சார்பில் இரும்பிலான, 200 லிட்டர் வரை எண்ணெய் பிடிக்கும் தீபக்கொப்பரை, புதிதாக செய்து அதை ஊர்வலமாக எடுத்து வந்தனர். பின்னர் மாலை, 6:00 மணிக்கு மேல் கொப்பரையில் பிரம்மாண்ட திரிப்போட்டு கொட்டவாடி மலையில் தீபமேற்றினர். அப்போது பக்தர்கள் அரோகரா, அரோகரா என கோஷமிட்டனர். தீபத்தையொட்டி நேற்று மாலை, 6:00 மணியளவில் கொட்டவாடி கருணாகரேஸ்வரர் ஆலயத்தின் முன்புறமுள்ள திருக்கோடி கம்பத்தில் தீபம் ஏற்றினர். மூலவர் கருணாகரேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். சிவனடியார் கைலாய வாத்தியங்கள் இசைக்க, சிறப்பு பூஜையில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். மேலும், பெத்தநாயக்கன்பாளையம் ஆட்கொண்டேஸ்வரர் ஆலயம், ஏத்தாப்பூர் சாம்பமூர்த்திஸ்வரர் ஆலயம், கல்யாணகிரி தேன்மலை சிவாலயம் ஆகிய ஆலங்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. பெத்தநாயக்கன்பாளையம் லட்சுமி நரசிம்மர், கொட்டவாடி லட்சுமி நாராயணபெருமாள், ஏத்தாப்பூர் பெருமாள் ஆலயம் உள்ளிட்ட கோவில்களிலும் தீபத்தையொட்டி, திருக்கோடி கம்பங்களில் தீபமேற்றி, மாலை, 7:00 மணிக்கு மேல் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.