பதிவு செய்த நாள்
15
டிச
2016
12:12
குளித்தலை: அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோவில் அடிவாரத்தில், பொண்ணிடும்பாறை வழிபாட்டு இடத்தில், போலி பூசாரிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், அவர்களை அப்புறப்படுத்த கோரிக்கை எழுந்துள்ளது. குளித்தலை அடுத்த அய்யர்மலையில், இந்துசமய அறநிலையத்துறைக்கு சொந்தமான ரத்தினகிரீஸ்வரர் உள்ளது. மலை ஏற முடியாத பக்தர்கள், கோவிலின் அடிவாரத்தில், பொண்ணிடும்பாறை மற்றும் கம்பத்தில் சுவாமியை வழிபட்டு செல்வர். இந்நிலையில், பொண்ணிடும்பாறையில் வழிபாடு நடத்த வரும் பக்தர்களிடம், தங்களை கோவில் பூசாரிகள் எனக்கூறி, ஒரு கும்பல் பணம் பறிக்கும் வேலையில் ஈடுபட்டு வருகிறது. நாளுக்கு நாள் அவர்களின் ஆதிக்கம் அதிகரித்து வருவதால், பூஜைகள் நடத்துவதில் பிரச்னை ஏற்படுகிறது. இவ்விவகாரம் தொடர்பாக, கோவில் நிர்வாகத்திடம், பக்தர்கள் பலமுறை புகார் தெரிவித்தும், அவர்கள் கண்டுகொள்ளவில்லை. எனவே, அறநிலையத்துறை அதிகாரிகள் தலையிட்டு, போலி பூசாரிகளை அடையாம் கண்டு, அவர்களை அப்புறப்படுத்த வேண்டுமென, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.