ஒரு காட்டில் மூன்று மரங்கள் வளர்ந்திருந்தன. அவை ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு ஆசை இருந்தது. முதல் மரம் தன்னை தங்கமும் வைரமும் வைக்கும் பெட்டியாக மாற்ற வேண்டும் என ஆசை கொண்டது. இரண்டாவது மரம் மகாபிரபுக்கள், மன்னர்கள் பயன்படுத்தும் கப்பலாக மாற வேண்டும் என ஆசைப்பட்டது. கடைசி மரம், விண்ணை முட்டும் அளவுக்கு வளர்ந்து கடவுளே தன் மீது இளைப்பாற வேண்டும் என ஆசைப்பட்டது. சில நாட்களில் எல்லா மரங்களும் வெட்டப்பட்டன. முதல் மரம் அது நினைத்தது போலவே பெட்டியாக்கப்பட்டது. ஆனால், நகைப் பெட்டியாக அல்ல. இறந்தவர்களை வைக்கும் சவப்பெட்டியாக மாற்றப்பட்டது. தன் நிலைமைக்காக அது மிகவும் வருந்தியது. இரண்டாவது மரம் நினைத்ததுபோல கப்பலாக மாறாமல் படகாக மாறியது. ஆனால் மன்னர்களின் பொழுதுபோக்கு படகாக அது அமையவில்லை. மீன் பிடிக்க பயன்பட்டது. தனது நிலைமைக்காக அந்த மரமும் வருத்தப்பட்டுக் கொண்டிருந்தது. மூன்றாவது மரத்தை வெட்டியவர்கள், அதை மாடுகளுக்கு தீவனம் வைக்கும் பெட்டியாக மாற்றினர். சில ஆண்டுகள் கடந்தன. ஒரு கர்ப்பிணிப்பெண் தன் கணவருடன் அந்த மரங்கள் இருந்த பகுதிக்கு வந்தாள். ஊரில் எங்கும் இடம் இல்லாததால் மாட்டுக்கு உணவு வைக்கும் பெட்டி இருந்த தொழுவத்திற்கு வந்து தங்கினர். அந்த பெண்ணுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. அந்தப்பெட்டியில் குழந்தையை படுக்க வைத்தார்கள். இப்போது அந்த தொழுவத்தை தேடி தேவ துõதர்களே வந்தார்கள். இயேசுபிரானே அவதரித்து அந்த பெட்டியின் மீது படுத்திருந்தார். அந்த மரத்திற்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. நகைப்பெட்டியாகவோ, கப்பலாகவோ மாறியிருந்தால் கூட பணக்காரர்களின் பார்வை மட்டுமே தன்மீது பட்டிருக்கும். இப்போது தேவ துõதர்களின் பார்வை பட்டதால் தான் பெரும் பயனை எய்தியதாக அது கருதியது. கடவுள் நமது ஆசைகளைப் பூர்த்தி செய்யவில்லையே என வருத்தப்படக்கூடாது. ஆனால் அவர் நிச்சயமாக நமது நல்ல நோக்கங்களைப் பூர்த்தி செய்வார். சீட்டு மடியிலே போடப்படும், காரிய சித்தியோ கர்த்தரால் வரும்’ என்ற பைபிள் வசனத்தின்படி கடவுளால் நமது நல்ல நோக்கங்கள் நிச்சயம் நிறைவேற்றப்படும் என்பதை உணர்ந்து நல்லதையே நினைத்து வாழ்வோம்.