கெட்டவர் என்றால் யார்?’ என ஒரு கேள்வியை உங்களிடம் கேட்டால், பிறர் பணத்தை அபகரிப்பவர்கள், ஏமாற்றுக்காரர்கள், கொலைகாரர்கள், மோசடிக்காரர்கள், பெண்களை ஏமாற்றுபவர்கள்...’ என்று பதிலளிப்பீர்கள். ஆனால், நாயகம், இந்த பட்டியலில் இன்னும் சிலரையும் சேர்த்திருக்கிறார். “சுவை மிக்க பானங்கள் அருந்துபவர்கள், சுவை மிக்க உணவு வகைகள் உண்பவர்கள், விதவிதமான ஆடைகள் அணிபவர்கள், அளவுக்கு அதிகமாகப் பேசுபவர்கள், சுகபோகத்திலேயே ஆழ்ந்து கிடப்பவர்கள்’ ஆகியோரும் கெட்டவர்களே என்றும் அண்ணலார் கூறுகிறார். உலகத்தில் எத்தனையோ ஏழைகள் ஒருவேளை கஞ்சிக்கு கூட வழியில்லாமல் கிடக்க, அவர்களையெல்லாம் மறந்து விட்டு, மேற்கண்டவற்றைச் செய்து கொண்டிருப்பவர்கள் சுயநலவாதிகள் ஆகின்றனர். எனவே தான் நாயகம் அவர்கள் இது விஷயத்தில் கடுமை காட்டுகிறார். கெட்டவர்கள் வரிசையில் கடன் வாங்கிய நபர் களையும் நாயகம் அவர்கள் சேர்த்துள்ளார். “உங்களுடைய பாவங்களை அல்லாஹ் மன்னித்து விடுவான். ஆனால், உங்களுடைய கடன்கள் மன்னிக்கப்படுவதில்லை. இப்பொழுது தான் ஜிப்ரயீல் (அலை) அவர்கள் இதனை என்னிடம் சொல்லிச் சென்றார்கள்” என்கிறார். வங்கிகளில் கடன் வாங்கி ஏமாற்றிய பட்டியலில் உள்ளவர்கள் இறைவனிடம் மன்னிப்பு பெற முடியாது என்பதை உணர்ந்தால் சரி.