பல ஆண்டுகளுக்கு முன், இங்கிலாந்தைச் சேர்ந்த ஸ்டெல்லா என்ற கப்பல் பயணத்தின் போது, புயலில் சிக்கி சேதமடைந்து மூழ்க ஆரம்பித்தது. கப்பல்தலைவர், உயிர்தப்பும் படகு, கருவிகளைப் பயன்படுத்தி பலரைக் காப்பாற்றினார். ஒரு படகில் 12 பெண்களை ஏற்றி விட்டார். அந்தப் படகில் ஆண்கள் யாருமில்லை. தள்ளுவதற்கு துடுப்புகளுமில்லை. புயல் காற்று எந்தெந்த திசையில் வீசுமோ, அதன் போக்கிலேயே படகு சென்று கொண்டிருந்தது. இரவு வேளை... உடை முற்றுமாக நனைந்து குளிர்தாங்க முடியாமல் நடுங்க ஆரம்பித்துவிட்டனர். பிழைப்போம் என்ற நம்பிக்கையும் அற்றுப்போனது.அப்படகில் மார்க்ரெட் வில்லியம் என்ற கிறிஸ்தவப் பெண்மணி இருந்தார். அவர் சிறந்த பாடகி. நடுங்கும் குளிரிலும் கடல் கொந்தளிப்பின் மத்தியில் அவள் முழு பலத்தையும் ஒன்று திரட்டி எந்த பதட்டமும் பயமுமின்றி உரத்த சத்தமாகப் பாட ஆரம்பித்தாள். படகிலிருந்த மற்றவர்களின் முழுக்கவனமும் பாடலை நோக்கித் திரும்பியது. இயேசு கிறிஸ்து எந்த சூழ்நிலையிலும் இரட்சிக்க வல்லவர் என்ற கருத்தாழமிக்க பாடல் அனைவரையும் கவர்ந்தது. மரண பயமும் திகிலும் மாறி இயேசு தங்களைக் காக்க வல்லவர் என்ற நம்பிக்கை பிறந்தது. புயலும் கடல் கொந்தளிப்பும் குறைய ஆரம்பித்தது. ஆனால், மார்க்ரெட் தனது பாடலை நிறுத்தவில்லை. அனைவரும் நன்றியோடு ஆண்டவரைத் துதித்தனர். விடியும் வேளை நெருங்கியது. அப்போது அங்கே வந்த மீனவர்கள் காதில், பாடல் சத்தத்தையும் துதியின் சத்தம் கேட்டது. அந்த திசை நோக்கி அவர்கள் படகை செலுத்தினர். தத்தளித்த படகை தங்கள் படகுடன் கட்டி இழுத்து பத்திரமாக கரைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். கொந்தளிப்பின் மத்தியிலும், பாடி துதித்து ஆண்டவரை வேண்டும் போது, அவர் அற்புதம் செய்கிறார். கொந்தளிப்பின் மத்தியிலும், ஆண்டவரை பிரார்த்திக்கும் போது, அவர் நம்மைக் காப்பாற்றும் பொறுப்பை எடுத்துக் கொள்கிறார்.- தேவனுடைய வார்த்தை புத்தகத்தில் இருந்து