பதிவு செய்த நாள்
22
டிச
2016
12:12
நாமக்கல்: புழக்கத்தில் இருந்த, பழைய ரூபாய் நோட்டுகளை, வரும், 30க்குள் வங்கியில் செலுத்த வேண்டும் என்பதால், இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில் உண்டியல்களை திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. நாட்டில் புழக்கத்தில் இருந்த, பழைய ரூபாய் நோட்டுகளை, வரும், 30க்குள், வங்கிகளில் டிபாஸிட் செய்து, மாற்றிக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில், இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில்களில் வைக்கப்பட்டுள்ள உண்டியல்களில், பழைய ரூபாய் நோட்டுகள் அதிக அளவில் செலுத்தப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கோவில் நிர்வாகம் சார்பில், உண்டியல் திறக்கப்பட்டு, பழைய, ரூபாய் நோட்டுகள் இருந்தால், வரும், 30க்குள், வங்கியில் செலுத்தி மாற்றிக்கொள்ள, துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். இதுகுறித்து, இந்து அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் கூறியதவது: நாமக்கல் மாவட்டத்தில், இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான, 899 கோவில்கள் உள்ளன. அவற்றில், உண்டியல் உள்ள கோவில்கள், 67. இக்கோவில்களில், வரும், 30க்குள், உண்டியல் திறக்கப்பட்டு, பக்தர்கள் காணிக்கை செலுத்திய பணத்தை, வங்கியில் செலுத்தும் பணியில் ஈடுபட, கோவில் நிர்வாகிகள் ஏற்பாடுகள் செய்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.