பதிவு செய்த நாள்
24
டிச
2016
12:12
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீப திருவிழா காணிக்கை உண்டியல் மூலம், ஒரு கோடியே, 74 லட்சத்து, 33 ஆயிரம் ரூபாய் வசூலானது. திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கானோரும், பவுர்ணமி தோறும் லட்சக்கணக்கான பக்தர்களும் கிரிவலம் சென்று, சுவாமி தரிசனம் செய்வர். அவ்வாறு வரும் பக்தர்கள் செலுத்தும், உண்டியல் காணிக்கை மாதந்தோறும் எண்ணப்படுவது வழக்கம். இந்த மாதம் கார்த்திகை தீப திருவிழா கொண்டாடப்பட்ட நிலையில், மஹா தீபம் மறுநாள் பவுர்ணமி தினமும் வந்ததால், 15 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் சென்று சுவாமி தரிசனம் செய்து, உண்டியல் காணிக்கை செலுத்தினர். காணிக்கை எண்ணும் பணி, நேற்று முன்தினம் கோவில் திருக்கல்யாண மண்டபத்தில், கோவில் இணை ஆணையர் ஹரிப்பிரியா முன்னிலையில், 52 உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டன. இதில், பக்தர்கள், ஒரு கோடியே, 74 லட்சத்து, 33 ஆயிரத்து, 537 ரூபாய், 375 கிராம் தங்கம், ஒரு கிலோ 170 கிராம் வெள்ளி காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.