பதிவு செய்த நாள்
26
டிச
2016
02:12
ஓசூர்: ஓசூர் அடுத்த கெலமங்கலத்தில் உள்ள பாழடைந்த சோழர் கால சந்திர மவுலீஸ்வரர் கோவிலை, பக்தர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஒன்றிணைந்து புனரமைத்து வருகின்றனர்.
ஓசூர் அடுத்த கெலமங்கலம் ஜீபியில், சோழர் காலத்தில் கட்டப்பட்ட சந்திர மவுலீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில், சோழர்கள் ஆட்சிக்காலத்தில் துவங்கி, ஒய்சாளர்கள், விஜயநகர பேரரசு என, மூன்று அரசுகளின் பராமரிப்பில் இருந்துள்ளது. ஆனால் கடந்த, 20 ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல் உள்ளதால், கோவில் கருவறை, அர்த்தமண்டபம், நீளமான முகப்பு மண்டபம் மற்றும், இரு தெப்பக்குளம் மோசமான நிலையில் உள்ளது. கோவில் கருவறையில் இருந்த மூலவர் சிலை, கெலமங்கலத்தில் காசிவிஸ்வநாதர் கோவிலில் வைத்து வணங்கப்பட்டு வருவதாக பக்தர்கள் மத்தியில் கூறப்படுகிறது. வரலாற்றை தாங்கி நிற்கும் சந்திரமவுலீஸ்வரர் கோவில் அர்த்தமண்டபத்தின் தூண்களில், கண்ணப்பநாயனாரின் சிற்பம், விநாயகர், நடனத்துடன் கூடிய இசை சிற்பங்கள், யானை, நந்தி மற்றும் மல்யுத்தம் செய்யும் சிற்பம் என ஏராளமான சிற்பங்கள் உள்ளன. கருவறையின் இடதுபுறத்தில், அனுமன் சிற்பமும் உள்ளது. நீளமான மகாமண்டபத்தின் நுழைவுவாயிலில் உள்ள இரு கற்தூண்களில், பெருமாளின் சங்கும், சக்கரமும் செதுக்கப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட பல பெருமைகளை உள்ளடக்கிய இக்கோவில், தற்போது புதர்மண்டி கிடக்கிறது. இந்த கோவிலை சீரமைக்க, கெலமங்கலம் பகுதி பக்தர்கள், தன்னார்வலர்கள், வரலாற்று தேடல் குழுவினர் முடிவு செய்து, கடந்த, இரு ஞாயிற்றுக்கிழமைகளில், புனரமைப்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர். பணி முடிந்த பின், கோவிலில் தினமும் பூஜைகள் செய்ய வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.