பதிவு செய்த நாள்
27
டிச
2016
12:12
குன்னுார்: குன்னுாரில் ஐயப்ப சுவாமி கோவிலின், 50வது ஆண்டு பொன்விழா மண்டல பூஜை கோலாகலமாக நடந்தது. குன்னுாரில் உள்ள ஐயப்பன் கோவிலில், 50வது ஆண்டு பொன்விழா மண்டல பூஜை நேற்று முன்தினம் துவங்கியது. தொடர்ந்து, உற்சவ கொடியேற்றப்பட்டு, திருவிளக்கு பூஜை நடந்தது. மேலும், சபரிஹால், ஐயப்பன் கோவில், சத்யசாய் சேவா சமிதி ஆகியவற்றில் நடந்த அன்னதானத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம் ஆகியவை நடந்தன. மாலை, 3:00 மணிக்கு மதுரை ஈஸ்வரி, ஈஸ்வரன் அங்கு ஸ்ருதி குழுவினரின் பக்தி இன்னிசை நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, செண்டை வாத்தியங்கள் முழங்க, தாளமேந்திய கன்னியர்கள் அணிவகுத்து வந்தனர். இதில், பாலக்கொம்புடன் கூடிய தேரில், உற்சவ மூர்த்தி, புலி வாகனத்தில் ஐயப்பன் பவனி நடந்தது. கோவிலில் துவங்கிய ஊர்வலம், பஸ் ஸ்டாண்ட், கேஷ்பஜார், காமராஜர் சிலை, டி.டி.கே., ரோடு, கிருஷ்ணாபுரம், வி.பி., தெரு, மவுன்ட் ரோடு, மேல்கடை வீதி, மாரியம்மன் கோவில், பெட்போர்டு, ராஜாஜிநகர் வழியாக கோவிலை அடைந்தது. ஏற்பாடுகளை குன்னுார் ஐயப்ப பக்த சங்க நிர்வாகிகள், ஐயப்ப பக்தர்கள் செய்திருந்தனர்.