பதிவு செய்த நாள்
28
டிச
2016
12:12
காஞ்சிபுரம் : காணும் பொங்கலுக்கு, திம்மசமுத்திரத்தில் நடக்கும் பார்வேட்டை திருவிழாவிற்கு, காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் புதிய உற்சவர் வருகைக்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால், இந்த ஆண்டு திருவிழா நடக்குமா என, கேள்வி எழுந்துள்ளது.
காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்று விளங்கும் கோவில்களில் ஒன்றாகவும், பஞ்சபூத தலங்களில் முதன்மையானதுமான பிருத்வி தலமாகவும், சைவ குரவர்கள் பாடல் பெற்ற தலமாகவும் ஏகாம்பரநாதர் கோவில் விளங்கி வருகிறது. இந்த கோவில் உற்சவரான சோமாஸ்கந்தர் சிலை, 1,000 ஆண்டுகள் பழமையானது.இந்த உற்சவர் சிலையின் அடிப்பாகம் சேதம் அடைந்ததால், இந்து அறநிலைய துறை சார்பாக புதிய சிலை நிறுவப்பட்டு, குடமுழுக்கு விழா நடத்தப்பட்டது. இதையடுத்து, ஏகாம்பர நாதர் கோவிலில் புதிய உற்சவர் சிலை பயன்படுத்த எதிர்ப்பு தெரிவித்து, ஆன்மிக அன்பர்கள் மற்றும் பக்தர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.இந்நிலையில், வரும் காணும் பொங்கலுக்கு, காஞ்சிபுரம் அடுத்த திம்மசமுத்திரம் கிராமத்தில் ஆண்டுதோறும் ஏகாம்பரநாதர் எழுந்தருளும், பார்வேட்டை உற்சவம் நடைபெறும். இந்த விழாவில், அனைத்து விதமான மேளதாளங்களுடன், ஏகாம்பரநாதருக்கு சிறப்பு விழா நடத்தி, அவரை அழைத்து செல்வர். இதில், ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பர்; ஒரு பகல் அந்த கிராமத்தில் தங்கி, அடுத்த இரவுக்கு மீண்டும் கோவிலுக்கு திரும்புவார். ஆனால், இந்த ஆண்டு இந்த உற்சவம் நடக்குமா என, பக்தர்களிடம் சந்தேகம் எழுந்துள்ளது.
புதிய உற்சவர் சிலைக்கு, திம்மசமுத்திரம் கிராமத்து மக்களும் எதிர்ப்பு தெரிவித்துஉள்ளனர். பல ஆண்டு காலமாக வந்த பழைய உற்சவருக்கு பதில் புதிய சிலையுடன் உற்சவம் நடத்தினால் கிராமத்தில் அசம்பாவிதம் ஏதும் நடந்துவிடுமோ என, அச்சப்படுகின்றனர். அதனால், பழைய உற்சவர் எங்கள் ஊருக்கு வந்தால் நாங்கள் திருவிழா நடத்த தயார் என்றும், புதிய சுவாமி சிலையை நாங்கள் ஏற்கவில்லை எனவும், திருவிழா நடத்துவோர் தரப்பில் கூறப்படுகிறது.
ராஜாமணி, திருவிழா குழு உறுப்பினர், திம்மசமுத்திரம்: எங்கள் கிராமத்தில், 80 ஆண்டுகளாக பார்வேட்டை உற்சவம் நடக்கிறது. இந்த ஆண்டு திருவிழாவுக்கு பழைய உற்சவர் வருவார் என, எதிர்பார்த்த நிலையில், புதிய உற்சவர் வருவார் என, கோவில் தரப்பில் கூறப்பட்டதால், எங்கள் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். புதிய உற்சவர் வந்தால், திருவிழா நடத்த மாட்டோம் என, செயல் அலுவரிடம் கடிதம் கொடுத்துள்ளோம்.