பதிவு செய்த நாள்
11
அக்
2011
04:10
செல்வம், செல்வாக்கு, சுதந்திரம் போன்ற வாய்ப்புகள் அமைந்தால் தான் அரும்பெரும் செயல்களைச் செய்ய முடியும் என்று எண்ணுபவர்கள் உள்ளனர். ஆனால், வாய்ப்பை உருவாக்கிக் கொள்வது என்பது மனிதனுடைய மன நிலையைப் பொறுத்ததாகும். நல்லவர்களிடமிருந்து நல்ல வாழ்க்கையைக் கற்றுக்கொள்ள வேண்டும். நல்வாழ்க்கைக்கு புத்தகங்களும், சொற்பொழிவுகளும் உள்ளன என்றாலும், மனிதன் எப்படி வாழ வேண்டும் என்று தாமே வாழ்ந்து, நமக்கு வழிகாட்டுகின்றனர் மகான்கள். வாய்ப்பேச்சால் இல்லாது, வாழ்க்கை மூலம் அவர்கள் நமக்கு புகட்டும் பாடமே மேன்மையானது ஆகும். மூக்கு கண்ணாடியின் நிறத்திற்கு ஏற்ப பார்க்கும் பொருள்களின் நிறமும் மாறுபடும். அதுபோல் மனம் என்ற கண்ணாடியில் கெட்ட மனமுடையவர்க்கு உலகம் கேடானது. நல்ல மனமுடையவர்களுக்கு உலகெல்லாம் நல்லது. மனம் என்னும் கண்ணாடியை உடைத்தவர்க்கு அனைத்தும் கடவுள் மயமாகும். நம் வாழ்நாளில் கடந்த பகுதி கனவாகப் போய்விட்டது, எஞ்சி யிருக்கும் நாட்களும் கனவுபோல் ஆகிவிடும். இதை எண்ணிப் பார்த்து, இறைவனிடம் நம் அறியாமையை அகற்ற பிரார்த்திக்கலாம். நமது தொலைநோக்கு பார்வை பிறருக்கு நல்லதைச் செய்வதாக இருக்க வேண்டும்.
பார்வையோ, சைகையோ, சொல்லோ பிறரை ஏமாற்றுவதாக இருக்கக்கூடாது. அதுபோல், வீண் பேச்சு கூடாது. பிறருடைய குறைகளைப் பெரிதுபடுத்தக் கூடாது. நல்லதையே பேசினாலும் கூட அளவுடன் பேசக் கற்றுக் கொள்ள வேண்டும். நல்வாழ்வுக்காக தினசரி சிறிது நேரம் ஒதுக்கி, உயர்ந்த எண்ணங்களை உள்ளத்தில் எண்ணிப் பார்த்து பழக்கத்திலும் கொண்டு வரவேண்டும். ஆற்றலுடன் நல்லறிவு அமைய இதுவே நல்ல வழி. எதிலும் அவசரம் இல்லாமல், கடமையை ஒழுங்காகச் செய்து கட்டுப்பாட்டுடன் இருத்தல் அவசியம். ஒவ்வொரு செயலையும் முறையாக கையாள தனித்தனி முறைகள் உள்ளன. சில செயல்களைத் தந்திரமாகக் கையாள வேண்டும். உடல் என்ற இயந்திரத்தை இறைவன் மூலம் கையாளுதலே நல்ல தந்திரம். பிறந்த குழந்தை மல்லாந்து கிடக்கிறது, முயன்று முயன்று குப்புறப் படுக்கிறது, தவழ்கிறது, நிற்கிறது, கீழே விழுகிறது, பிடித்துப் பிடித்து நடக்கிறது. தத்தி நடக்கிறது, பின்பு நேரே நடக்கிறது. இதேபோன்று இறைவணக்கத்திலும், பக்தன் முயன்று முயன்று மேல்நிலைக்கு வரவேண்டும். விளக்கு எரியும் வீட்டுக்குள் திருடர்கள் புகுவதில்லை. அதுபோல், மனதிற்குள் தெய்வத்தை நினைத்து, ஞான விளக்கேற்றி வைத்திருப்பவர் களின் நெஞ்சத்தில் அற்பமான எண்ணங்கள் நுழைவதில்லை.
கப்பல் கடலில் நிற்கும் போது அதன் காந்த ஊசி வடதிசையை காட்டி நிற்கும். வாழ்வில் மனிதனுக்கு வரும் துன்பங்களுக்கிடையே அவனுடைய மனது என்ற காந்தஊசி கடவுள் என்ற குறியையே நாடியிருக்க வேண்டும். நோயால் உடல் வலிமை குறைவது போல், மனதில் தோன்றும் கெட்ட எண்ணம் மனஆரோக்கியத்தை அழிக்கிறது. உள்ளத்தில் தோன்றும் தீயஎண்ணத்தை அகற்றுவதன் மூலம் கெட்ட நோய்களாகிய கெட்ட எண்ணங்கள் மனத்திலிருந்து நீங்கி, வெளியுலகில் நல்ல தொடர்பு ஏற்படுகிறது. உலகை இயக்கும் இறைவனுக்கு ஓய்வு இல்லை. அவனது பேருழைப்பால் உலகம் புனிதம் பெறுகிறது. முறையாக உழைப்பவர்கள் இறைவணக்கம் செய்து முன்னேறுகின்றனர். உழைக்க கற்றுக்கொள்பவர்கள் வாழ கற்றுக் கொள்கின்றனர். பசித்திருப்பவன் உண்ண விரும்புவது போல், கடவுளின் அருளுக்கு பாத்திரமாக இதுவே நேரம் என்பதால் அதைப்பெற முழு மனதுடன் இப்பொழுதே முயல வேண்டும். உலகில் அனைத்தும் அழியும் தன்மை யுடையது. நமக்கு வேண்டப்பட்டவர் அழிகின்றனர், நண்பர்கள் விலகிச் செல்கின்றனர், செல்வம் அழிகிறது. ஆனால், உண்மை மட்டும் உறுதியாக நிற்கிறது. அவ்வுண்மையும் இறைவனும் ஒன்றேயாகும்.
-தாயுமானவர்.