தஞ்சாவூரில் இருந்து 20 கி.மீ., தூரத்தில் திருக்காட்டுப்பள்ளி உள்ளது. காவிரியாற்றின் தென்கரையில் உள்ள இத்தலத்தை கற்றவர்கள் கருதும் காட்டுப்பள்ளி என்று போற்றுகிறார் ஞானசம்பந்தர். இதனை மேலைத்திருக்காட்டுப் பள்ளி என்று சொல்வது வழக்கம். கீழைத்திருக்காட்டுப்பள்ளி என்ற தலம், நவக்கிரகங்களில் புதன் ஸ்தலமான திருவெண்காடு அருகில் உள்ளது. அங்கே ஆரண்ய சுந்தரேஸ்வரர் என்ற திருநாமத்தோடு இறைவன் விளங்குகிறார். அக்னிதேவன் திருக்காட்டுப்பள்ளியில் வழிபாட்டுக்காக குளம் வெட்டி தீர்த்தம் எடுத்து சிவபூஜை செய்ததாக தலவரலாறுகூறுகிறது. சுவாமிக்கு அக்னீஸ்வரர் என்று பெயர். தீயாடியப்பர் என்றும் அழைக்கப்படுகிறார். அம்பிகைக்கு சவுந்தர்யநாயகி என்பது திருநாமம். மாசி மகத்தன்று இங்கிருந்து 3 கி.மீ., தொலைவிலிருக்கும் நாகாச்சி கிராமத்துக்கு சுவாமியும், அம்பாளும் சென்று திரும்புவர். நாகன் என்ற சிற்றரசன் கொள்ளிடத்தின் ஓடத்துறையான நாகாச்சியை ஆட்சி செய்ததாகவும், அம்மன்னனே சவுந்தர்யநாயகி சிலையை வழிபாட்டுக்குச் செய்து கொடுத்ததாகவும் கூறுவர். அதனால் நாகாச்சி கிராமம், அம்மனின் பிறந்தவீடாக கருதப்படுகிறது. பிறந்த வீட்டுக்குச் செல்லும் பெண்ணுக்கு சீதனம் கொடுப்பதுபோல, அவ்வூர் மக்கள் தங்கள் மகளாய் கருதும் சவுந்தர்ய நாயகி அம்பாளுக்கு சீதனமும், செல்லும் வழியில் சாப்பிட கட்டுச்சோற்றுக் கூடையும் கொடுத்து அனுப்புவர்.