பதிவு செய்த நாள்
12
அக்
2011
11:10
களியக்காவிளை : புனித ஜாண் போஸ்கோவின் வலக்கரம் அடங்கிய பேழைக்கு தக்கலை மறை மாவட்டம் சார்பில் படந்தாலுமூடு மறைமாவட்ட ஆலயத்தில் நாளை(13ம் தேதி) வரவேற்பு அளிக்கப்படுகிறது.தூய ஜாண் போஸ்கோவின் 200வது பிறப்பு ஆண்டையும், சலோசிய சபை தோற்றுவிக்கப்பட்டதின் 150வது ஆண்டை நினைவு கூறும் வகையில் தூய ஜாண் போஸ்கோவின் திருவுடல் தாங்கிய பெட்டகத்தின் திருப்பயணம் உலகம் முழுவதும் இப்போது நடக்கிறது.130 நாடுகள் வழியாக செல்லும் இத்திருப்பயணமானது 2009 ஜனவரி 31ம் தேதி துவங்கி, பல்வேறு இடங்களில் பயணித்து தற்போது நமது நாட்டிற்கு வந்து கொண்டிருக்கிறது. இத்தாலியில் ஒரு பெரிய விவசாய மையமான டூரின் என்னும் இடத்தில் ஒரு ஏழை குடும்பத்தில் தூய ஜாண்போஸ்கோ பிறந்தார்.ஜாண் போஸ்கோவிற்கு இரண்டு வயது ஆகும் போது அவரது தந்தை பிரான்சிஸ் போஸ்கோ இறந்தார். அவரது தாய் மார்கிரட் மகன் ஜாண் போஸ்கோவை இறைபக்தியில் வளர்த்தார். ஒன்பதாம் வயதில் ஜாண் ஒரு கனவு கண்டார். அந்த கனவில் தன்னை சுற்றி ஏராளமான குழந்தைகள் நிற்பதும், அவர்களுக்கு நன்மை தீமை கற்பிக்க ஒரு தூய மனிதர் கேட்டு கொண்டதும், அழகான ஒரு பெண்மணி இவை அனைத்தையும் உற்று பார்த்து கொண்டிருப்பதையும் கண்டார்.இக்காட்சியை ஜாண் தனது தாயிடம் கூறினார். அப்பொழுதே தன் மகன் ஒரு குருவாக மாறுவார் என்று அவர் கருதினார். சிறு வயது முதலே ஜாண் சில பொழுதுபோக்கு வித்தைகளை காட்டி குழந்தைகளை தன் அருகிலும், இறை அருகிலும் கொண்டு சென்றார். ஜாண் மிக சிரமப்பட்டு கல்வி கற்றார்.பங்குத்தந்தை ஜோசப்கபாஸோ, ஜாணின் படிப்பிற்கு உதவினார். 1841 ஜூன் 5ம் தேதி ஜாண் குருவாக அருட்பொழிவு செய்யப்பட்டார். அவர் குழந்தைகளுக்காக இல்லம் ஒன்றை தன் தாயின் உதவியுடன் துவங்கினார். இரண்டு மாதத்திற்குள் 80க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஜாண் போஸ்கோவின் சிறுவர் நகரில் வசிக்க துவங்கினர்.தெருவில் அலைந்து திரிந்தவர்களை அழைத்து சிறப்புடன் வாழ செய்தார். ஜாண் 1854ம் ஆண்டு ஜனவரி 26ம் தேதி சலேசியன் சபையை துவக்கினார். 21 ஆண்டுகளுக்கு பின் பெண்களுக்கான ஒரு சபையை துவக்கினார். ஜாண் போஸ்கோ இறக்கும் போது 768 உறுப்பினர்கள் அந்த சபையில் இருந்தனர்.1975ம் ஆண்டு அவருடைய சபை மக்கள் 72 நாடுகளில் சுமார் 30 ஆயிரமாக அதிகரித்தது. ஜாண் போஸ்கோ ஆண்மிகத்தில் சிறந்து விளங்கினார். இறப்பு வரை நல்வினைகளுடனும், புன்சிரிப்புடனும் காணப்பட்டார். 1886 டிசம்பர் 11ம் தேதி தனது 72வது வயதில் இறையடி சேர்ந்தார். ஜெயமாதாவோடு அதிக பக்தி இருந்தது. உன்னால் இயலுவதை முழுவதையும் செய். பிறகு இறைவனும், இறை அன்னையும் செய்வார்கள் என்பதே அவருடைய முக்கிய சிந்தனையாக இருந்தது. தூய ஜாண் போஸ்கோ அனாதைகள், ஆதரவற்றோர், இளைஞர்கள் வாழ்க்கையில் வழிகாட்டியாக இருந்தார்.இன்று அவரின் பரிந்துரை மூலமாக இறைவன் அதிக நன்மைகள் புரிகிறார். இப்போது இங்கு சந்திக்க வருகின்ற திருவுடல் தாங்கிய பெட்டகத்தில் பல நன்மைகள் புரிந்த அவருடைய வலக்கரமானது வைக்கப்பட்டுள்ளது. தற்போது கேரளா வந்தடைந்த இப்பெட்டகமானது தமிழக எல்லையை நாளை(13ம் தேதி) வந்தடைகிறது.தக்கலை மறைமாவட்டம் சார்பிலும், பிற மறைமாவட்ட அருகிலுள்ள பங்குகள் சார்பிலும் வரவேற்பு அளிக்கப்படுகிறது. இந்த வரவேற்பு நிகழ்ச்சி படந்தாலுமூடு மறைமாவட்ட ஆலயத்தில் நாளை மாலை நடக்கிறது. ஏற்பாடுகளை தக்கலை மறைமாவட்ட பரிபாலகர் பிலிப் கொடியந்தறா தலைமையில் மறைமாவட்டத்தினர் செய்து வருகின்றனர்.