தெப்பக்குளம் அழகுபடுத்தும் பணி ரூ.2.25 கோடி வீணாகும் அபாயம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13அக் 2011 10:10
மதுரை : மதுரையில் மத்திய அரசு வழங்கிய ரூ.2.25 கோடியில் மாரியம்மன் தெப்பக்குளத்தைச் அழகுபடுத்தும் பணி, தெப்பத்திருவிழாவையொட்டி வீணாகும் அபாயம் உள்ளது. தற்போது போலீஸ் ஸ்டேஷன் பகுதி, தியாகராஜர் பள்ளி பகுதியில் தெப்பக்குளம் நடைமேடையையொட்டி செடிகள் நடப்பட்டு, பாதுகாப்பாக இருக்க கம்பி வலைகள் அமைக்கப்படுகின்றன. ஆண்டுதோறும் இங்கு நடக்கும் தெப்பத்திருவிழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடும்போது, இவை பாதுகாப்பாக இருக்குமா என்பது சந்தேகம். தெப்பத்தை இழுக்கும் வடத்தை நான்கு திசைகளிலும் கொண்டு வரும்போது இந்த அழகிய செடிகளும், கம்பி வலைகளும் சேதமடையும். இதனால் ரூ.2.25 கோடி வீணாகும். இதற்கு பதில், கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தெப்பக்குளத்தைச் சுற்றி இதேபோல், செடிகள் நடப்பட்டு, அதை பாதுகாக்க கனமாக இரும்பு கம்பிகளை வேலியாக அமைத்துள்ளனர். அதேபோல், இங்கேயும் இரும்பு கம்பிகளை கூண்டு வடிவமைப்பில் அமைத்து, திருவிழா முடிந்ததும் அதை அகற்றலாம். இதனால் தெப்பக்குளத்தை அழகுபடுத்தும் நோக்கம் நிறைவேறும். கோடிக்கணக்கில் செலவழித்ததை பாதுகாக்க, சில லட்சங்கள் செலவு செய்து இரும்பு கூண்டு அமைக்க மாநகராட்சியும், கோயில் நிர்வாகமும் பரிசீலிக்க வேண்டும்.