பதிவு செய்த நாள்
02
ஜன
2017
02:01
திருப்பூர்: ஆங்கில புத்தாண்டு பிறப்பதை முன்னிட்டு, நேற்று முன்தினம் இரவு திருப்பூரிலுள்ள, கிறிஸ்துவ சர்ச்களில், சிறப்பு ஆராதனை, திருப்பலி உள்ளிட்டவை நடந்தது. திருப்பூர், குமரன் ரோட்டிலுள்ள, புனித கேத்ரீன் தேவாலயத்தில், இரவு 11:30க்கு, ஏசு செய்த அனைத்து கொடைகளுக்கும் நன்றி தெரிவிக்கும் ஆராதனை நடந்தது. ஆலய பங்கு தந்தை மரியசூசை நடத்தினார். சரியாக, 12:00 மணிக்கு, புத்தாண்டு திருப்பலி துவங்கியது. இதில், கிறிஸ்துவர்கள் பங்கேற்று, பிரார்த்தனை செய்தனர். ஒருவருக்கு ஒருவர் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்ந்தனர். நேற்று, காலையும், புத்தாண்டு திருப்பலி நடந்தது. அதே போல், அவிநாசி ரோடு, சி.எஸ்.ஐ.,தூய பவுல் ஆலயத்தில், இரவு புத்தாண்டு மற்றும் திருவிருந்து ஆராதனை பாஸ்டர் விஜயன் தலைமையில் நடந்தது. கோர்ட் வீதி டி.இ.எல்.சி.,அருள்நாதர் ஆலயம், எஸ்.ஏ.பி., சந்திப்பில் உள்ள, சி.எஸ்.ஐ.,தூய லுக்கா ஆலயம் உள்ளிட்ட அனைத்து கிறிஸ்துவ தேவாலயங்களிலும், புத்தாண்டு சிறப்பு ஆராதனைகள் நடந்தன. அவிநாசி, பல்லடம், சேவூர் உள்ளிட்ட திருப்பூர் சுற்று வட்டாரத்திலுள்ள அனைத்து தேவாலயங்களில், புத்தாண்டை முன்னிட்டு, சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன.