பதிவு செய்த நாள்
03
ஜன
2017
12:01
மேட்டூர்: தமிழக எல்லை கிராமத்தில், திரவுபதியம்மன் கோவில் பண்டிகையை முன்னிட்டு, பக்தர்கள், 10 ஆண்டுகளுக்கு பின், தங்கள் குழந்தைகளுக்கு பெயர் சூட்டினர். சேலம் மாவட்டம், மேட்டூர் தாலுகா, கோவிந்தபாடி கிராமம், தமிழக - கர்நாடகா எல்லைப்பகுதியில் உள்ளது. இங்கு, திரவுபதியம்மன் கோவில் உள்ளது. பண்டிகையின் போது, பக்தர்கள் கிடா வெட்டுவர். பின்னர், பிறந்த குழந்தைகளுக்கு பூசாரி பெயர் சூட்டுவார். பண்டிகை நடத்துவது தொடர்பாக, இரு தரப்பினருக்கு மோதல் ஏற்பட்டது. இதுதொடர்பான வழக்கு, நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்ததால், 10 ஆண்டுகளாக பண்டிகை நடக்கவில்லை. இதனால், 20க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், 10 ஆண்டுகளாக தங்கள் குடும்பத்தில் பிறந்த குழந்தைகளுக்கு, பெயர் வைக்காமல் இருந்தனர். ஒரு வாரத்துக்கு முன், வழக்கு முடிந்து, வருவாய்துறை அதிகாரிகள் முன்னிலையில் கோவில் திறக்கப்பட்டது. நேற்று திரவுபதியம்மன் கோவில் பண்டிகை நடந்தது. பக்தர்கள் பலர், பல ஆண்டுகளாக வேண்டுதலுக்காக வளர்த்து வந்த பெரிய, பெரிய ஆடுகளை கோவிலில் வெட்டி நேர்த்திக்கடன் செலுத்தி, 10 ஆண்டுகளுக்கு பின், தங்கள் குழந்தைகளுக்கு பெயர் சூட்டினர். பக்தர்கள் பலி கொடுக்க கொண்டு வந்த, 100க்கும் மேற்பட்ட ஆடுகள், குத்தப்பட்டு கோவில் அருகே, ஒரே இடத்தில் குவித்து வைக்கப்பட்டன.
கோவில் பக்தரான கான்ட்ராக்டர் கோவிந்தன் கூறியதாவது: பக்தர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு, முதலில் பூசாரிதான் அம்மன் பெயர் சூட்டுவார். 10 ஆண்டுகளாக பண்டிகை நடக்காததால், பக்தர்கள் பலருக்கு குழந்தை பிறந்த போதும், முறைப்படி பெயர் சூட்டவில்லை. எனினும், பெயர் சூட்டினால் மட்டுமே, பிறப்பு சான்றிதழ் பெற முடியும். பள்ளியில் குழந்தையை சேர்க்க முடியும் என்பதால், ராசி, நட்சத்திரம் பார்த்து தங்கள் குழந்தைகளுக்கு பெயர் வைத்து விடுவர். எனினும், சம்பிரதாயப்படி கோவிலில், குழந்தைகளுக்கு வேறு பெயர் சூட்டப்படும். இவ்வாறு அவர் கூறினார்.