திருவாரூரில் பிறக்க முக்தி என்று சொல்லுவார்கள். இசை வழியே இறைவனை வழிபட்ட சங்கீத மும்மூர்த்திகள் எனப் போற்றப்பட்ட சத்குரு தியாகராஜ சுவாமிகள், முத்து ஸ்வாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரிகள் ஆகிய மூவரும் திருவாரூர் திருத்தலத்திலேயே அதுவும் அடுத்தடுத்த தெருக்களில் பிறந்தவர்கள். இம்மூவரும் தெய்வப்பாமாலைகள் புனைந்து வாழ்நாள் முழுவதும் சங்கீத உபாசனை புரிந்து இறையருளை முழுமையாகப் பெற்றுத் திகழ்ந்தவர்கள். ஒரே ஊரில் பிறந்து, வளர்ந்து, ஒரே துறையில் சாதனை புரிந்த சங்கீத மும்மூர்த்திகளின் ஒற்றுமை வியப்புக்குரியது!