மதுரை: மதுரை லட்சுமி சுந்தரம் ஹாலில் சத்குரு சங்கீத சமாஜத்தின் 65வது ஆண்டு இசை விழா நடந்தது. நேற்று காயத்திரி வெங்ட்ராகவன் குழுவினரின் கர்நாடக சங்கீத வாய்ப்பாட்டு இசை நிகழ்ச்சி நடந்தது. இசை உலகில் பிரகாசமாக உலா வரும் காயத்திரி, கச்சேரியின் முதல் பாடலாக நாட்டை ராகத்தில் வாக்குண்டாம் நல்ல மனம் உண்டாம் என, விருத்தம் பாடி விநாயகரை வணங்கினார். பின், நமோ நமோ ரகுகுல நாயக என, துவங்கும் ரூபக தாள கீர்த்தனையை வைகுண்ட ஏகாதசி அன்று பெருமாளை வணங்கும் விதத்தில் பாடினார். நாட்டை ராகத்தில் இவர் பாடிய கற்பனை ஸ்வரங்களால் கச்சேரி களைகட்டியது. தொடர்ந்து முத்துசாமி தீட்சிதர் இயற்றிய லம்போதராய நமஸ்தே என்ற பந்து வராலி ராக கிருதி நிரவல், ஸ்வரங்களுடன் கணபதியை துதித்து நின்றது. கண்டசாபு தாளத்தில் காயத்திரி பாடிய பந்துவராலி ராக ஸ்வரங்கள் ரசிகர்களின் கைதட்டலை பெற்றது.
அடுத்தது, ஹிந்தோல ராக ஆலாபனை நேர்தியாக பாடப்பட்டது. வயலின் கலைஞர் ஸ்ரீகாந்த், அச்சுப் பிசகாத இசையை வழங்கினார். ஹிந்தோல ராகத்தில் பிரபலமான பாடல் மா ரமணன் உமா ரமணன் என்ற, பாடல் ரூபக தாளத்தில் ரசிகர்களை மகிழ்வித்தன. ஹிந்தோல ராக கற்பனை ஸ்வரங்கள் கச்சேரிக்கு தோரணம் கட்டின. சுவாதி திருநாள் இயற்றிய கேதேந்திர சாயினம் பாடல் கண்டசாபு தாளத்தில் பெருமாள் புகழ் பாடியது. காயத்திரி, காம்போதி ராக ஆலாபனை தொடங்கி, ராகத்தில் வர்ணஜாலம் காட்டினார். ஸ்ரீரங்கத்தில் தியாகராஜர் பாடிய ஓ ரங்க சாயி என்று, துவங்கும் ஆதி தாள கீர்த்தனை வைகுண்ட வாசலில் பெருமாள் தரிசனத்தை இசை வழியாக காட்டியது. மிருதங்கம் வாசித்த கணபதிராமன், கடம் இசைத்த கிருஷ்ணசாமி தங்கள் பங்கை சிறப்பாக செய்தனர். இன்று மாலை 6:00 மணிக்கு கன்யாகுமரி குழுவினரின் இசை நிகழ்ச்சி நடக்கிறது.