பதிவு செய்த நாள்
10
ஜன
2017
12:01
ஓசூர்: ஓசூர் ஜலகண்டேஸ்வரர் கோவில் தெப்பக்குளத்தில், மீன்கள் செத்து மிதப்பதால், கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. பக்தர்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளதால், குளத்தை உடனடியாக தூர்வார வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ஓசூர் ராமநாயக்கன் ஏரிக்கரையில், பழமை வாய்ந்த ஜலகண்டேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள தெப்பக்குளத்தை, பக்தர்கள் புனித நீராட பயன்படுத்தி வந்தனர். ஆனால் காலப்போக்கில் விநாயகர் சிலை கரைக்கவும், திதி கொடுத்த பொருட்களை கரைப்பதற்கும், தெப்பக்குளம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
திருப்பி விடப்பட்ட கழிவுநீர்: மேலும், கோவில் தெப்பக்குளம் அருகே, ராமநாயக்கன் ஏரி ராஜவாய்க்காலில் செல்லும் சாக்கடை கால்வாய் கழிவு நீரை, கோவிலை சுற்றியுள்ள பகுதியில் புற்கள் முளைக்க, ஆடு, மாடு மேய்க்கும் விவசாயிகள் திருப்பி விடுவதால், தெப்பக்குளம் ஊற்று நீர் மாசடைந்து, குளத்தில் உள்ள தண்ணீர் முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக, கோவில் தெப்பக்குளத்தில் உள்ள மீன்கள் செத்து மிதந்து வருகின்றன.
பக்தர்கள் குற்றசாட்டு: இதில், இரண்டு முதல், மூன்று கிலோ எடை கொண்ட மீன்கள் கூட செத்து மிதப்பதால், கோவிலை பராமரித்து வரும் பக்தர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். தினமும் செத்து மிதக்கும் மீன்களை பக்தர்கள் அப்புறப்படுத்தி வரும் நிலையில், எந்த காரணத்திற்காக மீன்கள் செத்து மிதக்கிறது என தெரியவில்லை. தெப்பக்குளத்தில் கொட்டப்படும் கழிவால் தான் மீன்கள் செத்து மிதப்பதாக, பக்தர்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தூர்வார வலியுறுத்தல்: ஏற்கனவே அசுத்தமாக இருந்த தெப்பக்குளத்தின் தண்ணீர், தற்போது மீன்கள் செத்து மிதப்பதால், கடும் துர்நாற்றத்தை வெளிப்படுத்துகிறது. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, ஜலகண்டேஸ்வரர் கோவில் தெப்பக்குளத்தை தூர்வாரி, புதிய தண்ணீர் நிரப்ப வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.