மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம் பக்தர்கள் விருப்பம் நிறைவேறுமா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10ஜன 2017 12:01
திருமங்கலம்: திருமங்கலத்தில் மீனாட்சி சொக்கநாதர் கோயிலை புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்துகின்றனர். பழமையான இக்கோயிலில் இருந்து மதுரை மீனாட்சி திருக்கல்யாணத்திற்கு தாலி கொண்டு செல்லப்படுவதால், ’திருமாங்கல்யம்’ என்ற பெயர் மருவி திருமங்கலம் என்றானது. கடந்த 2002ல் கும்பாபிஷேகம் நடந்தது. அதன் பின் 2014ல் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இதுவரை நடத்தப்படவில்லை.கோயிலை சீரமைத்து கும்பாபிஷேகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக, பக்தர்களுக்கும் கோயில் நிர்வாகத்திற்கும் அமைச்சர் உதயகுமார் வாக்குறுதி வழங்கினார். ஆனால் இதுவரை கண்டுகொள்ளவில்லை. கோயில் நிர்வாகமோ உபயதாரர்கள் கிடைத்தால் மட்டுமே கும்பாபிஷேகம் செய்ய முடியும். அரசு நிதி ஒதுக்கீடு கிடைக்கவில்லை எனக்கூறி வருகிறது. இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில், ”ஆக்கிரமிப்பில் சிக்கி உள்ள 15 ஏக்கருக்கும் மேற்பட்ட கோயில் நிலங்களை மீட்டு, வருவாயினை அதிகரித்தும், அரசிடம் நிதி ஒதுக்கீடு பெற்றும் இந்த ஆண்டாவது கும்பாபிஷேகம் நடத்த வேண்டும்,” என்றனர்.