பதிவு செய்த நாள்
10
ஜன
2017
12:01
கோபி: பாரியூர் குண்டம் தேர்த்திருவிழாவில், தீ மிதிக்கும் பக்தர்கள் நீராட வசதியாக, ’சவர்’ அமைக்கும் பணி தீவிரமாக நடக்கிறது. கோபி, பாரியூர் கொண்டத்து காளியம்மன் குண்டம் தேர்த்திருவிழா, டிச., 29ல் பூச்சாட்டுதலுடன் துவங்கியது. வரும், 12ம் தேதி காலை, 60 அடி குண்டத்தில் பக்தர்கள் தீ மிதிப்பர். தீ மிதிக்கும் பக்தர்கள், ஈரத்துணியுடன் குண்டம் இறங்குவர். வழக்கமாக கோவில் அருகில் ஓடும், தடப்பள்ளி வாய்க்காலில் தண்ணீர் செல்லும். இதில் பக்தர்கள் நீராடி விட்டு, குண்டத்தில் இறங்குவர். நடப்பாண்டில் தண்ணீர் இல்லாத நிலையில், தீ மிதிக்கும் பக்தர்களுக்காக, சவர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பெருமாள் கோவில் அருகே, ஒன்றரை இன்ச் அளவில், பி.வி.சி., பைப் பொருத்திய சவர் அமைக்கும் பணி தீவிரமாக நடக்கிறது. இரு பாலருக்கும் தலா பத்து சவர்கள், தடுப்பு வசதிகளுடன் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதேபோல் அன்னதான மண்டபம் அருகே, இரு பாலருக்கும் தலா பத்து சவர்கள், தடுப்பு வசதியுடன் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு இரும்பு பைப்புகள் இணைக்கும் பணி நடக்கிறது. இதில்லாமல் தீ மிதிக்கும் பக்தர்கள் வரிசையாக நிற்கும் இடத்தில், ஃபேவர் பிளாக் கற்கள் பதிக்கும் பணி தீவிரமாக நடக்கிறது.