பதிவு செய்த நாள்
10
ஜன
2017
02:01
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவில் மார்கழி ஆரூத்ரா மகா தரிசனம் உற்சவத்தையொட்டி நடந்த நடராஜர் திருத்தேரோட்டத்தில் ஆயிரக்கனக்கான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.
பிரசித்திப் பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் மார்கழி ஆரூத்ரா மகா தரிசனம் உற்சவம் கடந்த 2ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனையொட்டி தினம் சிவகாமசுந்தரி அம்மன் சமேத நடராஜருக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம், தீபாராதனைகள் நடக்கிறது. வேதபாராயணத்துடன் காலை பஞ்சமூர்த்திகள் புறப்பாடும், இரவு சிவகாம சுந்தரி அம்மன் சமேத நடராஜர் சிறப்பு வாகனப் புறப்பாடு செய்து வீதி உலாக்கட்சி நடக்கிறது.
நடராஜர் தேரோட்டத்தையொட்டி, அதிகாலை சிவகாமசுந்தரி சமேத நடராஜர் சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம், தீபாராதனைகள் நடைப்பெற்று சுவாமிகள் சித்சபையில் இருந்து புறப்பாடு செய்து மஞ்சத்தில் அமர்ந்து காலை 6 மணிக்கு யாத்திரா தானம் புறப்பாடு செய்து மேளதாளங்களுடன் ஆனந்த நடனமாடியவாறு காலை 7 மணிக்கு திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
தேரில் சுவாமிக்கு உற்சவ ஆச்சாரியார் நடராஜரத்தின தீட்சிதர் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, திருப்பாவை, திருவெம்பாவை வழிப்பாடுகள் தீபாராதனைகள் நடந்தது. காலை 8 மணிக்கு ஆயிரகனக்கான பக்தர்கள் தில்லை அம்பலத்தானே, ஆடல் வல்லானே, நடராஜ பெருமானேஎன விண்ணை முட்டு கோஷம் எழுப்பி தேர் வடம் பிடித்து இழுத்து சென்றனர். விநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணியர், நடராஜ மூர்த்தி, சிவகாமசுந்தரி அம்மன் மற்றம் சண்டிகேஸ்வரர் ஆகிய ஐந்து தேரோட்டம் நடந்தது. இதில் ஆயிரக்கனக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். கீழவீதி, தெற்கு வீதி, மேலவீதிகளில் பக்தர்களுக்கு காட்சியளித்த நடராஜர் தேர் நன்பகல் 12 மணிக்கு கஞ்சித்தொட்டி சந்திப்பில் தேர் நிலைக்கு கொண்டு வரப்பட்டது.