பதிவு செய்த நாள்
12
ஜன
2017
12:01
ஓசூர்: தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள சிவன் கோவில்களில், ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு, நேற்று திரளான பக்தர்கள் வழிபட்டனர். ஆண்டுதோறும், மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை நட்சத்திரத்தில், சிவன் கோவில்களில் உள்ள நடராஜருக்கு சிறப்பு பூஜைகளுடன், ஆருத்ரா தரிசனம் நடக்கும். தர்மபுரி குமாரசுவாமி பேட்டை சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில், நேற்று நடந்த ஆருத்ரா தரிசனத்தில், சிவகாம சுந்தரி சமேத ஆனந்த நடராஜருக்கு, அதிகாலை, 4:00 மணிக்கு, பால், பஞ்சாமிர்தம், இளநீர் உட்பட, 16 வகையான திரவியங்களை கொண்டு அபிஷேகம் மற்றும் பூஜை நடந்தது. பின், சுவாமிக்கு தங்க கவசம் சாத்தப்பட்டு, ஆருத்ரா தரிசனம் நடந்தது. காலை, 7:00 மணிக்கு சிவகாம சுந்தரி சமேத ஆனந்த நடராஜருக்கு, திருஆபரண அலங்காரம் செய்யப்பட்டு, குமாரசுவாமி பேட்டை முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலம் வந்தார். ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். ஓசூர் மலை மீதுள்ள சந்திரசூடேஸ்வரர் கோவில், தேர்ப்பேட்டை பச்சைக்குளம் பத்ர காசி விஸ்வநாதர் கோவில், அத்திமுகம் ஐராவதேஸ்வரர் கோவில், சூளகிரி காசி விஸ்வநாதர் ஆலயம், ஆவல் நத்தம் பசுவேஸ்வரர் கோவில் உட்பட பல்வேறு சிவன் கோவில்களில், நேற்று ஆருத்ரா தரிசன சிறப்பு வழிபாடு நடந்தது. அதேபோல், கிருஷ்ணகிரி ராசுவீதியில் உள்ள சந்திரமவுலீஸ்வரர் கோவில், பழையபேட்டை ஈஸ்வரன் கோவில், கவீஸ்வரன் கோவில், லட்சுமி நாராயண பெருமாள் கோவில் ஆகிய கோவில்களில், ஆருத்ரா தரிசனம் நடந்தது. வேலூர், கோட்டை, ஜலகண்டேஸ்வரர் கோவிலில், நேற்று ஆருத்ரா தரினசம் நடந்தது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திருவெம்பாவை பாடல்களை தரிசனம் செய்தனர். பின் சுவாமி திருவீதி உலா வந்தது.